Home Art மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 2

மண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 2

by admin
0 comment
நாட்டுப்புறக் கலைகள் எனும் போது கிராமிய சிந்தனைகளைத் தூண்டும் வகையிலேயே இன்று நமது சிந்தனைப் போக்கு அமைந்து விடுகிறது. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாகிய நம் தமிழ்க் கலைகளை அவை கிராமியப் பண்பாடு என்று கூறுவதோடு மட்டுமல்லாது, கலைகளை உயர்ந்தவை தாழ்ந்தவை எனத் தரம் பிரித்து, அதில் மக்கள் கலைகளைத்  தாழ்மைப் படுத்தி புறந்தள்ளி வைத்து விட்டு மேட்டுக் குடி கலைகளாக, உயர்தன்மை வாய்ந்த கலைகளாக பரதத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் மட்டுமே காணும் போக்கு தமிழ் மக்கள் சூழலில் வளர்ந்தது கடந்த நூற்றாண்டில். அதன் தாக்கத்தை இன்றும் தொடர்ந்து காண்கின்றோம். இந்தச் சிந்தனைக்கு அடிப்படையாக இருக்கும் கருத்தியலை ஆராய்வதோடு, வளமான தமிழ் மரபின் முக்கிய அங்கமான மக்கள் கலைகளைப் பற்றிய ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் தொடக்கப்புள்ளியாக இந்த நிகழ்வினைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2018, அக்ட் 14ம் தேதி சென்னையில் நிகழ்த்தியது.
அந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியை இந்த விழியப் பதிவில் காணலாம். இதில் தமது ஆய்வு ரீதியான கருத்துக்களைப் பதிகின்றனர்:
-முனைவர்.கோ.பழனி, இணைப்பேராசிரியர், இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
-முனைவர்.ஜா.அமைதி அரசு, தமிழ்த்துறை, எல்.ஆர்.ஜி. அரசினர் மகலிர் கல்லூரி, திருப்பூர்
-முனைவர்.இரா.சீனிவாசன், பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை
-முனைவர்.மு,செல்லன், பேராசிரியர் (ஓய்வு), கரந்தை தமிழ்ச்சங்கக் கல்லூரி
-நாட்டுப் பாடல்கள் விளக்கம், முனைவர்.க.வெங்கடேசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு
தமிழர் மரபில் வழிபாட்டு அங்கமாகவும், கூத்து நாடக வடிவங்களிலும், கலை வடிவமாகவும்,   பல வேறுபாடுகளைக் கொண்டு தனித்துவமாகத் திகழும் ஆயிரக்கணக்கான கலைகள் இன்றும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு சேர்க்கின்றன. இவற்றில் பல சுவடுகள் அழிந்து மறைந்து வருகின்றன. இவற்றை  ஆவணப்படுத்துவது ஒன்றே இக்கலைகளை நாம் அறிந்து கொள்ள எடுக்கக் கூடிய மிக முக்கிய முன்னெடுப்பாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு சொற்பொழிவாளர்கள் தங்கள் கருத்துக்களை இப்பதிவில் முன் வைக்கின்றனர்.
நம்மில் பலர் கேள்விப்பட்டிராத, அறிந்திராத பல கலைகளைப் பற்றி  இந்த 1 மணி நேர பதிவு வெளிச்சம் பாய்ச்சுகிறது. நாடகக் கலைகள், கூத்து, இசை, மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வில் உள்ள மாணவர்களுக்கும் ஆய்வறிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயனளிக்கும்.
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் இடம்பெறும்.
விழியப் பதிவு: அசோக் (சென்னை, தமிழகம்)
விழியப் பதிவு தொகுப்பாக்கம்: முனைவர்.க.சுபாஷிணி ( THFi ஜெர்மனி)

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
——

தமிழ் நாட்டுக் கலைகளைப் பற்றி அறிந்து கொள்வோமா? – THFi

Video length- 1:03:06

Part II – Folklore Research Forum evnet organized by Tamil Heritage Foundation International on the 14th Oct 2018 held at Chennai, India.
தமிழர் மரபில் வழிபாட்டு அங்கமாகவும், கூத்து நாடக வடிவங்களிலும், கலை வடிவமாகவும், பல வேறுபாடுகளைக் கொண்டு தனித்துவமாகத் திகழும் ஆயிரக்கணக்கான கலைகள் இன்றும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு சேர்க்கின்றன. இவற்றில் பல சுவடுகள் அழிந்து மறைந்து வருகின்றன. இவற்றை ஆவணப்படுத்துவது ஒன்றே இக்கலைகளை நாம் அறிந்து கொள்ள எடுக்கக் கூடிய மிக முக்கிய முன்னெடுப்பாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு சொற்பொழிவாளர்கள் தங்கள் கருத்துக்களை இப்பதிவில் முன் வைக்கின்றனர்.

நம்மில் பலர் கேள்விப்பட்டிராத, அறிந்திராத பல கலைகளைப் பற்றி இந்த 1 மணி நேரப் பதிவு வெளிச்சம் பாய்ச்சுகிறது. நாடகக் கலைகள், கூத்து, இசை, மானுடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வில் உள்ள மாணவர்களுக்கும் ஆய்வறிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயனளிக்கும்.

 

தமிழ்ப் பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள்
கருத்துரை கலந்துரையாடல் நிகழ்வு
தமிழ் மரபு அறக்கட்டளை
அக்டோபர் 14, 2018

நாட்டுக் கலைகள் கருத்துரை நிகழ்ச்சியின் கருத்துரையிடலில் பங்குபெறுவோர்:
முனைவர். பழனி; இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
முனைவர். ஜா. அமைதி அரசு; தமிழ்த் துறை, எம்ஜிஆர் அரசினர் மகளிர் கல்லூரி, திருப்பூர்.
முனைவர். இரா. சீனிவாசன்; மாநிலக் கல்லூரி, சென்னை.
முனைவர். மு. செல்வன்; கரந்தை தமிழ்ச் சங்கம் கல்லூரி.
நாட்டார் பாடல்கள் விளக்கங்கள்: கா. வெங்கடேசன்; தமிழ்த் துறை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.

நெறியாள்கை – முனைவர். சுபாஷிணி:
மக்கள் கலைகளுக்கு மானிடவியல் ஆய்வு என்ற தலைப்பு கிடைக்கும் பொழுது அதற்குத் தனி மதிப்பு கிடைக்கிறது.
மக்கள் கலைகளை, நாம் அவற்றைப் பதிவு செய்வதுடன் மறந்துவிடுகிறோம். மீள்பார்வை செய்வதில்லை. சதிர் என்பது பரதம் என்று மாறிய பிறகு அதன் பழைய நிலையை நாம் நினைப்பதில்லை.இது திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்ற வகையிலும்; பழைய நிலை மறக்கப்படுகிறது என்ற மற்றொரு வகையிலுமாக நாமும் முன்பு இருந்ததை மறந்து விடுகிறோம்.
வாழ்வியல் என்பதன் அடிப்படையில் ….
வழிபாடு என்பது ஆய்வுக் கோணத்தில் எவ்வாறு பார்க்கப்படுகிறது?
அது குறித்த கருத்துக்கள் என்ன?
வழிபாடுகள் எவ்வாறு பார்க்கப்படுகிறது?
மனிதர்களின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கிறது?
வழிபாடுகள் எவ்வாறு மாறுபடுகிறது?
உரையாளர்கள் கருத்துகள் என்ன?

முனைவர். மு. செல்வன்; கரந்தை தமிழ்ச் சங்கம் கல்லூரி:[@ 5:55]
இருப்பதை இருப்பது போலவே ஆவணப்படுத்தி வைக்க வேண்டியது நமது கடமை.
தஞ்சை மாவட்ட நாட்டுப்புற நாடகங்கள் என்பதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக் கொண்டு ‘பிரகலாத சரித்திரம்’ என்பதைப் படித்தேன்.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு இனத்திற்கும், ஒவ்வொரு மரபினருக்கும் வெவ்வேறான வழிபாட்டு முறைகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
அந்தணர்கள், சௌராஷ்டிரர்கள், கள்ளர்கள், மூப்பனார்கள், நாகர்கோவில் நாயுடுகள் எனப் பலரும் அதே நாடகத்தை நடத்துகிறார்கள்.
அவற்றில் அவர்களது வழிபாட்டு முறை வெளிப்படுகிறது. சாலியமங்கலத்தில் நடந்த நாடகத்தில் பிரகலாதனைப் பள்ளியில் சேர்க்கும் காட்சி ஆச்சார முறையில் இருக்கும்.
ஆனால், இதே பிரகலாதனைப் பள்ளியில் சேர்க்கும் காட்சியைக் கள்ளர் அகமுடையார் ஆகியோர் காட்டும் பொழுது அது வேறு வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் காட்சியோ பிரகலாதனைப் பள்ளியில் சேர்ப்பது தான்.

இந்து மதம் என்பது இடைக்காலத்தில் வந்தது என்று கூறப்பட்டாலும், சிவனும் விஷ்ணுவும் பல காலமாகத் தமிழகத்தில் வணங்கப்படுகிறார்கள்.
அவரவர் வழங்குவதற்கு ஏற்றவாறு அவர்கள் நாடகங்களில் காட்சிகளை அமைப்பார்கள். ஆனால், இவற்றில் எது தவறு, எது சரி என்று நம்மால் சொல்ல முடியாது.
நடைமுறையில் வரும் வழிபாட்டு வேறுபாடுகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த வேறுபாடுகளில், காட்சி அமைப்பில் உள்ள வேறுபாடுகள் கொண்ட பல நாடகங்களில் எவற்றை நாம் பதிவு வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

முனைவர். பழனி; இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்:[@ 16:00]
என் கள ஆய்வின்படி மக்கள் வழிபாடு என்ற நூல் எழுதப்பட்டது. மக்கள் சார்ந்த வழிபாடு என்பதில், தெய்வங்கள் என்பது ஏதோ ஒரு வகையில் கொலை செய்யப்பட்டவர்கள் தெய்வங்களாக மாறியவர்கள்.
கடவுள் என்பது வேறு தெய்வம் என்பது வேறு. தெய்வம் என்பது மூதாதையர் வழிபாடாகத் தொடர்ந்து வருவது. மூதாதையர் வழிபாடு என்பதைப் பார்க்கும்பொழுது பெரும்பாலும் அது பெண் தெய்வ வழிபாடாக இருக்கும். நம் மரபில் பெண்கள் தான் அதிகம் போற்றப்படுகிறார்கள். அதுபோல பெண்கள் தான் அதிகம் தூற்றப்பட்டும் இருக்கிறார்கள். இறந்து போனவர்கள் மேல் கொண்ட பயம்தான் வழிபாடாக மாறியிருக்கிறது.
எல்லாக் கதையிலும் கொலை செய்பவரின் ஊரில் ஏதோ ஒரு தீங்கு நடக்கும். கொடிய நோய்கள் தாக்கும். ஆடு மாடுகள் இறக்கும். அதுகுறித்து குறி கேட்கும் பொழுது, நீங்கள் என்னைக் கொன்றுவிட்டீர்கள். எனக்கு ஒரு கோயில் கட்டி என் நினைவாக வழிபாடு செய்யுங்கள் என்று கூறப்படு. பிறகு நான் அவற்றைச் சரி செய்கிறேன் என்றும் கூறப்படும். ஏதோ ஒரு தீங்கு செய்யப்பட்டதன் விளைவாக அதை நிவர்த்தி செய்யப் பல கோயில்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றும் உருவாக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் பின் ஏதோவொரு அரசியல் இருக்கிறது. மண்ணின் மக்கள் தங்கள் தெய்வத்துடன் இயல்பாக உரையாடுவார்கள். இந்த ஆண்டு நன்றாக விளைய வில்லை என்றால் உனக்குத் திருவிழா கிடையாது என்பது போல் இயல்பாக உரையாடுவார்கள். ஆனால், கடவுளுடன் இதே போல இயல்பாக உரையாட வழியில்லை. இடையில் ஒருவர் இருப்பார். அவர் மொழியில் வேண்டுவார்கள். இடைத்தரகர் இல்லாத வழிபாட்டு முறை தான் நம்முடைய மரபு. அவ்வாறு தான் காலம் காலமாக இருந்திருக்கிறது. இன்று வரை தொடர்கிறது.

நாம் நாட்டுப்புறக் கலைகள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. நாட்டார் கலைகள் என்று குறிப்பிடுகிறோம். நாட்டார் மரபு என்பது மக்களின் மரபு என்ற வகையில் தான் நாம் சொல்கிறோம். நாடார் என்பது ஒரு சமூகம். ஆனால், நாட்டார் என்பது ஒரு மக்கள் இனம். தொண்டை நாட்டார், பாண்டி நாட்டார் என்பதுபோல நாட்டைச் சார்ந்தவர்கள் என்று பொருள். நாட்டார், நாட்டுப்புறக் கலைகள் என்பது தற்காலிகமாக வைத்துக்கொண்ட பெயர்தான். வாய்மொழி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம்,நாட்டார் இலக்கியம், நாட்டு இலக்கியம் என இவ்வாறு பல்வேறு பெயர்கள் அதற்கு இருந்தாலும் இவையாவும் தமிழ்நாட்டு மரபுக் கலைகள் என்பதைக் குறிப்பிடுவன.

நம்முடைய மரபு சார்ந்த வழிபாட்டு முறை என்பது இன்றைக்கும் ஒரு கோயில் பல பேருக்கு குடும்ப கோயிலாக, குலதெய்வமாக இருக்கும். பல சமூகத்தைச் சார்ந்தவர்களும் ஒரு குலதெய்வத்தை வழிபடுவார்கள். இந்த மரபின் படி ஏதோ ஒரு வகையில் அனைவரும் அந்த தெய்வத்துடன் தொடர்பு கொண்டிருப்பார்கள். அது வரலாறு சம்பந்தப்பட்டது. வைதீகம் சார்ந்த சிவன் விஷ்ணு போன்ற கடவுள் வழிபாட்டில் இந்த முறை இருக்காது. தமிழர் மரபில் காலம்காலமாக பெருமளவில் போற்றப்படுவது பெண் தெய்வங்கள் தான். இந்தப் பெண் தெய்வங்களைப் பற்றிச் சேகரிக்க வேண்டிய கதைகள் இன்றும் ஏராளமாக உள்ளது. ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே என்னுடைய நூலாக வந்துள்ளது. ஒரே கதையை ஒவ்வொருவர் சொல்லும் பொழுதும் வெவ்வேறு வகையில் இருக்கும்.

முனைவர். ஜா. அமைதி அரசு; தமிழ்த் துறை, எம்ஜிஆர் அரசினர் மகளிர் கல்லூரி, திருப்பூர். [@ 23:00]
ஒவ்வொரு மதத்திற்கும் அவர்களுக்கான ஒரு பொதுவான வழிபாடு இருக்கும். அந்த வழிபாடே வட்டார அளவில் வேறுபடும். காலம், தொழில், இடம், இனம் சார்ந்த வகையில் அதுவும் வேறுபடும். இதில் குலதெய்வம் குடும்ப தெய்வம் வகையில் பல வேறுபாடு உண்டு. பல பரிமாணங்கள் உண்டு. வழிபாடு என்பது தன்னை வதைத்துக் கொள்வது அல்ல, தன்னை அறிந்து கொள்வது.

முனைவர். மு. செல்வன்; கரந்தை தமிழ்ச் சங்கம் கல்லூரி:[@ 31:30]
ஆன்மா சாந்தி அடையாது என்ற நம்பிக்கை தமிழரிடம் உள்ளது. பூவாடைக்காரி, சேலைக்காரி அம்மன் என்பதெல்லாம் அந்த வகைதான். இவர்கள் நம்மை விட்டுப் போய்விட்டால் நம் அதிர்ஷ்டமே போய்விடும் என்று நம்புவார்கள். வளையல், பூ, மணி, சேலை இவற்றை எடுத்துக் கொண்டு உடுக்கை, பம்பை வாசித்து நீர்நிலையின் கரை அருகிலிருந்து இறந்துபோன அம்மனை வீட்டுக்கு அழைத்து வருவார்கள். அவர்களை தங்கள் வீட்டின் மேற்கூரையில் கட்டி வைக்கும் வழக்கம் உள்ளது. உடுக்கை பம்பை அடித்துப் பாடி, அம்மனை வரவழைத்து தன் வீட்டில் வைத்து விட்டால் அந்த வீட்டுக்காரர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று கருதுகிறார்கள். இதுதான் அவர்கள் வழிபாடு.

முனைவர். இரா. சீனிவாசன்; மாநிலக் கல்லூரி, சென்னை:[@ 34:00]
நாட்டார் கலை என்பது மக்கள் கலை(@ 35:00 பின்னே இரைச்சல்).
கூத்து என்பது மக்களைக் கவரக்கூடிய கலை. ஆகவே வழிபாட்டில் அதிகம் செலவு செய்து கூத்து நடத்துவார்கள். மக்கள் அதனை விரும்புகிறார்கள். வளமை வேண்டும் என்பதற்காகவும்; கூத்து என்பதை விரும்புவதாலும் விழாக்களை நடத்துகிறார்கள். அது மக்களின் கொண்டாட்டம்.

நாட்டார் பாடல்கள் விளக்கங்கள்: கா. வெங்கடேசன்; தமிழ்த் துறை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு.[@ 37:00]
இரணிய மோட்சம் என்பது இறந்தவர்களுக்காக வைக்கப்படும் கூத்து. பிரகலாதன் நாடகத்தில் பிரகலாதன் ‘இரண்யாய நம’ என்று சொல்லமாட்டான். ‘நாராயணாய நம’ என்று சொல்வான். எவ்வளவு சொன்னாலும், அவனது தாய் நீலாவதி சொன்னாலும் கூட ஏற்றுக்கொள்ள மாட்டான்.
(@ 39:00 பிரகலாதன் கூத்தில் இரண்யன் பிரகலாதன் பாடுவதாக உள்ள பாடல் இடம் பெறுகிறது)

நெறியாள்கை – முனைவர். சுபாஷிணி:[@ 41:00]
மானுடவியல் ஆய்வுகள் குறைவாக உள்ளன. பல நாட்டுப்புறக் கலைகள் குறித்துப் பதிவு செய்யப்பட வேண்டும். உலகம் முழுவதும் தாய் தெய்வ வழிபாடு என்பது நிலை பெற்றதாக உள்ளது. மேற்கத்திய நாடுகளிலும் அகழாய்வில் தாய் தெய்வ வழிபாடு தொல்லியல் தடையங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் அதிகம் நடத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கே நாம் வர வேண்டி இருக்கிறது. உலகம் முழுவதும் மக்களின் வழக்கங்கள் ஒற்றுமையுடன் உள்ளது. அவற்றிற்குப் பயம், நம்பிக்கை ஆகியவை அடிப்படையாக உள்ளன.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம் அடுத்த கட்ட ஆய்வு என்பதால்….
இவற்றில் ஆய்வு என்ற முறையில் எவற்றை நாம் அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டும்?
எவை வெகு சீக்கிரத்தில் அழியும் நிலையில் உள்ளன?
இவற்றில் நிலை காரணமாகத் துரித கதியில் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியவை எவை?
அவற்றைச் செயல்படுத்துகையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?
எவை சாத்தியமாகும் என்ற ஆலோசனை கிடைத்தால் சில முயற்சிகளை நாம் முன்னெடுக்கலாம்.
இந்த சடங்குகளில் சில கொடூரமானவையாக இருக்கக்கூடும். பலி கொடுத்தல், அலகு குத்துதல் போன்றவை அவை.
மிகத் துரிதமாக ஆவணப்படுத்த வேண்டிய கலைகள் எவை? இது குறித்த வேறுபட்ட பார்வையை எப்படி எதிர்கொள்வது?

முனைவர். மு. செல்வன்; கரந்தை தமிழ்ச் சங்கம் கல்லூரி:[@ 48:00]
கேரளாவிலிருந்து கதகளி வந்தாலும், ஆந்திராவிலிருந்து யட்சகானம் வந்தாலும், என் கலைதான் உயர்ந்தது, உன் கலை தான் உயர்ந்தது என்று பேதம் சொல்லக் கூடாது என்பதற்காக எல்லோருக்கும் ஒரு சம அளவில் பணம் கொடுக்கப்பட்டது. இதில் ராமானுஜம் சிறந்த தொண்டு செய்துள்ளார். ‘தப்பு’ கலையை, தப்பு அடிப்பதை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தார்.

பல கதைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும் பல பதிவாகாமல் மறைந்துவிட்டன. ‘மனுநீதி ராஜா’ பற்றிய கதை பரம்பரை பரம்பரையாக இருநூறு ஆண்டுகள் நடத்தப்பட்ட நாடகம். அதை ஆட இப்பொழுது ஆட்கள் இல்லை. தப்பு அடிப்பவர் சிரமத்தை நாம் அறிவதில்லை. இழவு வீட்டில் காசு கொடுத்தவர் முகத்தைப் பார்த்த அடிக்க வேண்டும் என்பது அவர்கள் எதிர்கொள்ளும் கட்டாயம்.

மனுநீதி ராஜா போல மற்றொன்று ‘அமுது படையல்’ என்பது. இது ‘சிறுத்தொண்ட நாயனார்’ கதை. இந்த பதிவுகளை நாம் கட்டாயம் செய்தாக வேண்டும். பிரகலாதன் கதை, சிறுத்தொண்ட நாயனார் கதை போல ‘அரிச்சந்திரன் நாடகம்’ புகழ் பெற்றதாக இருந்தது. சில நாடகங்களில் ‘மார்ஷியல் ஆர்ட்ஸ் ‘ இடையில் கொடுக்கப்பட்டிருந்தது. சௌராஷ்டிரா மக்கள் செய்யும் நாடகம் ஏகாதசி விரதத்தை அடிப்படையாகக் கொண்ட ருக்மாங்கதன் நாடகம். அது மாமியாருக்கு மருமகள் உணவு அளிக்காததால் உருவாக்கப்பட்ட ஓர் ஐதீகம் என்று கூறப்படுகிறது. இப்பொழுது இதுவும் மறைந்து விட்டது.

தேமொழி

You may also like

Leave a Comment