தமிழ் மரபில் ‘கூத்து’, ‘நாடகம்’ என்கிற சொற்கள் ஆகப் பழஞ்சொற்கள் என்பதில் ஐயமில்லை. தொல்காப்பியம், சங்க இலக்கியம் காலந்தொடங்கி இவ்விரு சொற்களும் புழக்கத்தில் இருந்து வருகின்றன. பழமரபுப்படி இவ்விரு நிகழ்த்துகலைச் சொற்களையும் இருவேறு வடிவங்களாக அடையாளம் காணமுடியவில்லை. சங்க காலத்தில் ‘கூத்து’ என்பது ஒரு பொதுச்சொல்லாக இயங்கி வந்துள்ளது. அடவுகள் போட்டு, மெய்ப்பாடுகள் தோன்ற ஆடிய பல்வகை நிகழ்த்து கலைகளையும் கூத்து என்ற சொல் அடையாளப்படுத்தியுள்ளது. நாடகம் என்பது ‘கதைத் தழுவிய கூத்து’ என்று அடியார்க்குநல்லார் உரைக்கிறார். ஆக, கதை தழுவி வருகின்ற பல்வகையான கூத்துகளையும் ‘நாடகம்’ என்ற சொல் உணர்த்துகின்றது என்று கொள்ளலாம். சங்க காலத்தில் தமிழ் மண்ணில் இருந்து வந்த நிகழ்த்துகலைகளைப் பல்வேறு நிகழ்த்துநர்களால் நிகழ்த்திக்கொண்டு வந்திருக்கவேண்டும். சங்க இலக்கியங்களான பழந்தமிழ் இலக்கியங்கள் பல நிகழ்த்துநர்களைச் (கண்ணுளர், ஆரியர், கோடியர், வயிரியர், பாடினி, கூத்தர், விறலியர்…) சுட்டுகின்றன. இவ்வகையான பல்வேறு நிகழ்த்துநர்கள் சார்ந்தே நிகழ்த்துகலைகளின் வரலாற்றை வரையறுக்க வேண்டும். அதோடு, அவற்றின் நிகழ்த்து முறைகளையும் கணக்கில் கொள்ளுதலும் வேண்டும்.
மேலே குறிப்பிட்டது போல, “தொல்காப்பியம், பதினென்கீழ்க் கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, கம்பராமயாணம் போன்ற தமிழ்ப் பெருநூல்களில் கூத்து, நாடகம் போன்ற சொற்களும் அவற்றுடன் தொடர்புடைய கூத்தன்; கூத்தர், கூத்தி, கூத்தியல், கூத்தியர், கூத்தாட்டவை, கூத்தப்பள்ளி, அரங்கக் கூத்தியர், ஆடல் கூத்தியர், கூத்தியல் பறிந்த கூத்தியர், கூத்துள்படுவோர், நாடகமகளிர்; நாடக மடந்தை, நாடகக் கணிகை, நாடகக்காப்பிய நன்னூல் போன்ற சொற்சேர்க்கைகளும் பலவாறாகக் காணப்படுகின்றன. கூத்து, நாடகம் இரண்டும் ஒரு பொருட்கிளவியாகப் பயன்பட்டுள்ளமை, “அரங்கக்கூத்தி சென்றையங் கொண்டதும் நகுதலல்லது நாடகக் கணிகையர்” எனும் மணிமேகலை (24: 22-24) வரிகளின்றும் தெரிய வருகிறது. ஆயின், பர்ரோ மற்றும் எமன்னோ உருவாக்கிய திராவிட வேர்ச்சொல் அகராதி (A Dravidian Etymologitcal Ditctionary; 1961) நாடகம் எனும் சொல் வடிவைக் கொண்டிலங்கவில்லை. கூத்து எனும் சொல் வடிவைக் கொண்டமைந்திருக்கிறது” (1998: 16) எனும் பேரா. மு. இராமசாமியின் கூற்று இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. அவரே, ‘தமிழ்ச் சமூகத்தில் கூத்து, நாடகம் ஒரு விவாதத்தை நோக்கி….’ எனும் கட்டுரையில், “தொகையும் பாட்டுமான சங்ககால இலக்கியங்களில் துணங்கை, குரவை, வெறியாட்டு போன்ற கூத்துகள் மிக விரிவாகப் பேசப்படுகின்றன என்று ஜான் ஆசீர்வாதத்தால் கூறப்பட்டாலும் அவை எவையும் ‘கூத்து’ எனும் ஒட்டுகளுடன் சங்க நூல்களில் அழைக்கப்படவில்லை என்பது போக, அவை எவற்றின் நிகழ்த்துப் பிரதிகளும் அரங்கப் பதிவுகளும் நிகழ்த்துமுறைப் பதிவுகளும் நம் கைவசம் கிடைத்திருக்கவில்லை. இதில் நமக்கிருக்கிற மிகப் பெரிய சிக்கல் நம்மிடம் வரலாற்று பதிவுகள் மற்றும் இலக்கியப் பதிவுகள் அதிகமில்லாததும் இருக்கிற பதிவுகளும் கொண்டு கூட்டியும் தெளிவான ஒரு முடிவுக்கு வழி நடத்திச் செல்ல முடியாதவையாயு மிருக்கின்றன. அந்த வகையில் ‘கூத்து’, ‘நாடகம்’ எனும் பொதுச் சொல்லாட்சிகள் எந்தக் காலத் தொடக்கம் தமிழர் வாழ்வியலுக்குள் என்ன வகையான பொருட்களை உணர்த்தி வந்திருக்கின்றன என்பது ஆராயப்பட வேண்டிய நிலையிலிருக்கிறது. கடந்த காலங்களில் நம் கைவிட்டுக் காணமால் போயிருக்கிற எத்தனையோ நிகழ்த்துகலை வடிவங்களையும் நாம் எவ்விதம் பதலீடு செய்யப்போகிறோம் அல்லது புரிந்து கொள்ளப் போகிறோம் என்பதும் நம்முன் நிற்கிற தீர்க்கப்படாத கேள்வியாகவே இருக்கின்றன” (கோ. பழனி; 2007: 43, 44) என்கிறார். இந்தக் கேள்வி சமகால நிகழ்த்துகலைகளுக்கும் பொருந்துவதாக உள்ளது. எனவே, நம்முன் நிகழ்த்தப்பட்டு வரும் நிகழ்த்துகலை வடிவங்களுள் ஒன்றான தெருக்கூத்து என்கிற வடிவத்திற்கான நிகழ்த்துகலைஞர் சார்ந்த வரலாற்றைக் கட்டமைக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.
சமகாலத்தில் தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் தெருக்கூத்து, காலந்தோறும் பல மாற்றங்களைக்கண்டு இன்றுள்ள வடிவத்திற்கு வந்திருக்க வேண்டும். இம்மாற்றத்தை அதன் பெயர், நிகழ்த்து முறை, நிகழ்த்துநர் ஆகியவற்றோடு இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இவ்வொட்டு மொத்தப் பார்வையே ஒரு நிகழ்த்தல் வடிவத்தின் வரலாறாக உருவாக முடியும்.
தெருக்கூத்து; தமிழகம் முழுவதும் பரவியிருந்த கலை (?) என்றும் தென் தமிழகத்தில் கணியான் என்கிற சாதியினரால் தெருக்கூத்து ஆடப்படுகிறது என்றும் தஞ்சையைச் சுற்றிய பகுதிகளில் நிகழ்த்தப் படும் பிரகலாத நாடகத்தைத் தெருக்கூத்து என்றும் பலவாறு புரிந்து கொள்ளப்படுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் திரௌபதியம்மன் கோயில்கள், இன்னபிற அம்மன் கோயில்கள் இருப்பதால் அங்கும் தெருக்கூத்து நிகழ்த்தப்பட்டது என்று கூறப்பட்டு வருகிறது. இ. கிருஷ்ணய்யர் தென் மாவட்டங் களில் தெருக்கூத்து நிகழ்வு பற்றி கூறியிருப்பது ஏற்கெனவே சுட்டப்பட்டது. “காரைக்குடியில் பத்மசாலியர் என்ற இனத்தாரும் மதுரையை அடுத்த வளையங்குளத்தில் இருக்கும் மெச்சன் வகையறாக்களும் நெல்லை மாவட்டத்தில் கணியான் இனத்தவர் களும் தெருக்கூத்தை ஆடுகிறார்கள் (2006: 17, 18) என்று துளசி இராமசாமி அவர்கள் குறிப்பிடுவது தெருக்கூத்து என்ற வடிவத்தை மட்டுமல்ல என்பது நினைவில் கொள்ள வேண்டி யுள்ளது. பல நாட்டார் நிகழ்த்துகலை வடிவங்களைத் ‘தெருக்கூத்து’ என்று விளிக்கும் வழக்கம் வெகுமக்களிடம் உள்ளது. அந்த வழக்கு ஒரு புறம் இருந்தாலும் ‘தெருக்கூத்து’ என்று குறிப்பாக ஆய்வாளர் களாலும் அறிஞர்களாலும் அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு சுட்டப்படுகின்ற வடிவம் ஒன்று இருந்து வருகிறது என்பதை ஆய்வாளர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். தெருக்கூத்து எது? கணியான் கூத்து எது? என்று நம் ஆய்வாளர்களால் கூட இனம் காணப்படாத நிலை தமிழ் ஆய்வுச் சூழலில் உள்ளது.
இதேபோல் தஞ்சைப் பகுதியில் நிகழ்த்தப்படும் பிரகலாத நாடகத்தைப் பற்றி, “தமிழின் நவீன நாடகச் சிந்தனையாளர்கள் தாம் இதைத் தஞ்சைப்பாணிக் கூத்து என்பதாகக் கூத்திற்கு ஓர், உயர் அங்கீகாரம் உருவாக்கும் தொனியில் கூறிக்கொண்டு வருகின்றனர். ‘பிரகலாத நாடகம்’ நிகழ்த்துபவர்களைப் பொருத்தவரை அது, இன்று வரையும் ‘நாடக’மாகத்தான் இருந்து வருகிறது” (கோ. பழனி; 2007: 45) என்கிறார் மு. இராமசாமி. ஆக கூத்து, நாடகம் என்கிற வடிவங்களில் பிற்காலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும் வேறுபாட்டையும் பிற நிகழ்த்துகலை வடிவங்களுக்கான வேறுபாடுகளையும் பகுத்துப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
சமகாலத் தெருக்கூத்தின் வரலாற்றைக் கட்டமைக்க முயலும் போது அதற்கான தொல் தரவுகள், வரலாற்றுப் பதிவுகள் எவையும் விரிவாகக் கிடைக்கப்பெறவில்லை. தெருக்கூத்து தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், தெருக்கூத்திற்கான வரலாறாக ஏதும் எழுதப்படவில்லை. தெருக்கூத்தின் முழுமையான வரலாற்றை உருவாக்குவதில் இடற்பாடுகள் உள்ளன. சமகாலத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் தெருக்கூத்திற்கான வரலாற்றைக் கட்டமைப்பதற்கு கூத்தர்களின் நினைவுகளே சான்றுகளாக உள்ளன. இவர்களின் நினைவுகளில் பதிவாகியுள்ளவையே சமகாலத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் தெருக்கூத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் முதன்மை தரவுகள். முந்தைய மற்றும் சமகாலத் தெருக்கூத்து நிகழ்த்துமுறை, நிகழ்த்திய – நிகழ்த்தும் கலைஞர்கள், அதன் ஒப்பனை மரபு, இசை மரபு, கூத்து நிகழ்த்தப்பட்ட – நிகழ்த்தப்படும் சூழல், கதைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், தெருக்கூத்தின் பல்வேறு பாணிகள் என்பன போன்று பல்வேறு தளங்களில் கூத்து வாத்தியார்களிடமும் கலைஞர்களிடமும் கேள்விகள் எழுப்பி, அதன்வழி பெறப்பட்ட வாய்மொழித் தரவுகளே சமகாலத் தெருக்கூத்து வரலாற்றைக் கட்டமைக்க உதவுவன.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல, வடக்கத்தி, தெற்கத்தி, மேற்கத்தி என்று தெருக்கூத்தில் மூன்று பெரும்பாணிகள் உள்ளன. ஒவ்வொரு கூத்து பாணிக்கென்றும் தனியான பார்வையாளர்கள் உள்ளனர். ஒரு பாணிக்கூத்தைப் பார்த்துப் பழகியவர்கள் மற்ற பாணியைப் பார்ப்பது கிடையாது. ஏனெனில், அவர்களின் பார்வைப் பழக்கம் அந்தந்த வடிவம் சார்ந்தது. அதோடு மட்டுமல்லாது, பிற பாணிக் கூத்தை ஏளனம் செய்வது என்பது பார்வையாளர்களிடம் மட்டுமல்லாது கூத்தர்களிடமும் காணப்படுகிறது. ஆக, தெருக்கூத்து பாணிகளை அந்தந்தப் பகுதி சார்ந்த மரபாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, தெருக்கூத்திற்குள் பல மரபுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வரலாற்றைக் கொண்டு இயங்கி வருகின்றன. இங்கு ‘தெருக்கூத்து வரலாறு’ என்று ஒற்றைத் தன்மையோடு அல்லாமல், நிகழ்த்தல்களின் தனித் தன்மைகளைக் கணக்கில் கொண்டும் நிகழ்த்துநர்களின் சமூகப் பின்னணிகளைக் கொண்டும் ‘தெருக்கூத்து வரலாறுகள்’ என்று பன்மையில் குறிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
ஒவ்வொரு பாணிக்கும் சில சமூகத்தவர்களே – சாதியார்களே முன்னோடி நிகழ்த்துநர்களாக இருந்துள்ளனர் என்பதை 2006 முதல் 2009 வரை மூன்று ஆண்டுகளாகக் கள ஆய்வு செய்து திரட்டிய தரவுகளின் வழி அறிய முடிகிறது. தற்போது பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தெருக்கூத்தை நிகழ்த்தி வருகின்றனர். மேலோட்டமாக ஆராய்ந்தால் சமகாலத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் கலைஞர்களோடு தொடர்புடையதாகக் கூத்தைப் பார்க்கத் தோன்றும். ஆனால், பழம் கூத்துக் கலைஞர்களின் வரலாறு சார்ந்தே கூத்தின் வரலாறும் அடங்கியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒருபகுதி மற்றும் திருவள்ளுர், மாவட்டத்தின் ஒரு பகுதி சார்ந்து இயங்கும் வடக்கத்தி பாணிக்கூத்து ஒப்பனையில் கேரளத்து கதிகளியோடும் கர்நாடகத்து யக்ஷகானத்தோடும் இணைத்துப் பார்க்கக்கூடியது. நேர்த்தியான நிகழ்த்தல் முறையைக் கொண்ட பாணியாக வடக்கத்திக் கூத்தைக் குறிப்பிடுகின்றனர். கண்ணாடிகள் பதிக்கப்பட்ட பிரமாண்டமான கிரீடங்களும் புஜக்கட்டைகளும் மார்புப் பதக்கங்களும் காது கட்டைகளும் ஆண்பாத்திரங்களின் அணிகலன்கள். இடுப்பில் கட்டப்படும் டவுறு (வட்டுடுப்பு) அதற்கு மேல் கட்டிக்கொள்ளும் அரைப் பாவாடை அத்தனையும் அழகுற வடிமைத்து தயாரிக்கப்படுபவை. முகத்தில் தீட்டப்படும் வண்ணங்களும் தெற்கத்தி, மேற்கத்தி பாணிக் கூத்துகள் போல் அடிப்படை வண்ணங்களோடு நின்று போவதில்லை. ஆண் பாத்திரங்களான அரசன், இளவரசன் போன்ற நாயக, எதிர்நாயகப் பாத்திரங்களுக்கு முகத்தில் ‘மாலுகள்’ (வண்ண வளைகோடுகள்) வரையப்படுகின்றன. இவை, அப்பாத்திரங்களின் உள்ளார்ந்த தன்மையை வெளிக்காட்ட உதவுவன. இத்தகைய ஒப்பனையோடு நிற்கும் வடக்கத்திப் பாத்திரத்தைத் தெற்கத்தி, மேற்கத்திப் பாத்திரத்தோடு ஒப்பிட முடியாதுதான். இம்மாதிரியான ஒப்பனை மரபிற்கு, காஞ்சிபுரம் சார்ந்த சிற்பக்கலை வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு.
இசைக்கருவிகளுள் முகவீணை, ‘பெடல் ஆர்மோனியம்’ வடக்கத்தி பாணிக்கான சிறப்பு இசைக்கருவிகளாகக் கருதப் பட்டாலும் மேற்கத்தி பாணிக்கூத்துக்களிலும் முகவீணை பயன்படுத்தப்படுகிறது. கூத்துப் பாடல்களுக்குப் பயன்படுத்தப் படும் மெட்டுக்களை, இராகங்கள் அடிப்படையிலேயே வடக்கத்திக் கூத்தர்கள் குறிப்பிடுகின்றனர். செவ்வியல் இசைக் கட்டமைப்போடு வடக்கத்திக் கூத்தில் பயன்படுத்தப்படும் இராக – தாள மரபு முழுமையாக இணைந்து வரவில்லை என்றாலும் இராகங்களின் அடிப்படையில்தான் இந்த வகைக்கூத்தின் இசை செயல்படுகிறது என்பதை மறுக்க முடியாது.
மேலும் அடவுகள் போட்டு ஆடும் முறை, மேடையைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் நவீனத் தன்மையைக் காண முடிகிறது. இப்படி நேர்த்தியான நிகழ்த்தல் முறையைக் கொண்ட வடக்கத்தி பாணிக் கூத்துக்களைத் தற்போது வன்னியர், வண்ணார் (இடைநிலை சாதியாருக்கு மட்டும் துணி வெளுக்கும் தொழில் செய்பவர்கள். தங்களை இந்து வண்ணார் அல்லது தமிழ் வண்ணார் என்ற சொல்லிக் கொள்கின்றனர்), மேலும் சில இடைநிலை சாதியைச் சார்ந்தவர்களும் மற்றும் ஆதிதிராவிடர்களும் நிகழ்த்தி வருகின்றனர்.
வடக்கத்திக் கூத்தில் இசைக்கருவிகளை மிருதங்கம், ‘பெடல் ஆர்மோனியம்’ போன்றவற்றை வெவ்வேறு சாதியார் (ஆதிதிராவிடர், வன்னியர், முதலியார் போன்றோர்) இசைத்து வர, முகவீணை மட்டும் மரபு சார்ந்து நாவிதர் சமூகத்தவர்களாலேயே இன்றளவும் வாசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வடக்கத்தி பாணிக் கூத்துக்களில்; சமகாலத்தில் மேலே குறிப்பிட்டது போல வன்னியர் உள்ளிட்ட பிற இடைநிலை சாதியினர் அதிகம் கூத்துக் கலைஞர்களாகவும் வாத்தியார்களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், இவர்கள் கூத்தில் பெரும்பாலும் முதல் தலைமுறையினராகவும் பழங்கலைஞர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருப்பதைத் தரவுகள் உறுதி செய்கின்றன. அவ்வாறெனில் வடக்கத்தி பாணிக்குரிய மரபு சார்ந்த கலைஞர்கள் யார்? என்ற கேள்வி எழுகிறது. கூத்தர்களின் நினைவுக்கு எட்டியவரை, ஐந்துக்கும் மேற்பட்ட தலைமுறையினராகத் வடக்கத்திக் கூத்தை முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்களாக வண்ணார் சமூகத்தைச் சார்ந்தவர்களே உள்ளனர். வடக்கத்தி பாணியில் பழம்பெரும் கூத்து வாத்தியார்கள் பெரும்பாலும் இந்து வண்ணார், தமிழ் வண்ணார் என்று அழைத்துக் கொள்ளும் சமூகத்தவர்களாகவே உள்ளனர். இந்தக் கலைஞர்களிடமிருந்து கற்றுக்கொண்டுதான் பிற சமூகத்து வாத்தியார்கள் உருவாகியுள்ளனர் என்பதைப் பின்வரும் கள ஆய்வுத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.
எடுத்துக்காட்டாக,
தெருக்கூத்தை நிகழ்த்தி வந்த பூர்வீகக் கலைஞர்கள் – வாத்தியார்கள் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்கள்? என்ற கேள்விக்கு,
“பொதுவாக ‘ரசகுலம்’ என்று சொல்வார்கள். அதாவது ஆதிகாலத்தில் இருந்தே யார், கூத்தாடி என்றால் எல்லோரும் வண்ணார்கள் அதாவது ஏகாலியைத்தான் சொல்லுவார்கள். இதில் ஊர் வண்ணார், சேரி வண்ணார் என்பதெல்லாம் கிடையாது. கலை – கலைஞர்கள் என்று சொன்னாலே அவர்களைத் தான் குறிக்கும். பிறகு மற்றவர்களுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டு இதற்கு வந்தார்கள். இதன் பிறகே யாதவர், முதலியார், நாயக்கர் என்று அனைத்து சாதியாரும் இதில் வந்து விட்டார்கள். தற்போது ஏகாலிகள் குறைந்து விட்டர்கள். வன்னியர்கள் தான் அதிகமிருக்கிறார்கள்”
(களஆய்வு: ஜெ. ராமன் (நாயக்கர்), வயது: 55, பால்செட்டிசத்திரம் (காஞ்சிபுரம்): 15.09.2007).
“தெருக்கூத்தில் எனக்குத் தெரிந்து டோபிகள் (வண்ணார்) தான் ஆரம்பத்தில் அதிகம் இருந்தார்கள். ஆனால் தற்போது குறைந்து விட்டார்கள். எங்கள் வன்னியர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்த ‘எஸ்.சி’க்கள் ஒரு சிலர் எங்கள் குழுக்களில் இருக்கிறார்கள். அவர்கள் தனியாகக் கூத்துக் குழுக்கள் வைத்துள்ளார்கள்”.
(களஆய்வு: எம்.கே கோபாலகிருஷ்ணன் (வன்னியர்), வயது: 64, முட்டவாக்கம் (காஞ்சிபுரம்): 15.09.2007)
“எங்கள் பாணியில் இன்றைய நிலையில் அதிகமாக இருப்போர் வன்னியர் தான். ஆனாலும் அவர்களுடைய வாத்தியார்கள் யார்? என்றால் கண்டிப்பாக ஏகாலிகளாகத் (வண்ணார்) தான் இருப்பார். அதேபோல் நாங்கள் ஆட்கள் குறைவாக இருந்தாலும் எங்களுக்கு ஈடுகொடுக்க கூத்தில் யாராலும் முடியாது. நாங்கள் ஊருக்கு ஒரு குடியாக இருப்பதனால் கூத்தில் நடிக்க பத்துபேர் தேவைப் படுகிறார்கள். அப்படிச் சேர்ந்தவர்கள் தான் பிற சாதியார். கூத்து என்பது இந்துவண்ணார்கள் சார்ந்தது”.
(களஆய்வு: எம். சேகர் (இந்து வண்ணார்), வயது: 46, பால்செட்டிசத்திரம் (காஞ்சிபுரம்): 17.09.2007)
“இந்த ஏகாலிகள் தான் வீட்டுக்கு வீடு சோறு வாங்கித் தின்பார்கள். இந்த ராஜகோபால் (கட்டைக்கூத்து சங்கத் தலைவர், காஞ்சிபுரம்) குடும்பம் கூட வீடு வீடாகச் சோறு வாங்கித் தின்றவர்கள் தான். ஆரம்பத்தில் ஏகாலிகள் தான் கூத்தாடினார்கள். பிறகு தான் கவுண்டர், காலனிக்காரர்கள், குயவர் என்று வந்தார்கள்.”
(களஆய்வு: ஏ.எம். மணி (கவுண்டர்), வயது: 61, செய்யாறு (திருவண்ணாமலை): 27.03.2008)
என்று வடக்கத்திக் கூத்து சார்ந்த பல்வேறு கூத்து வாத்தியார்கள் தம் கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர். இந்தத் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது ஐந்து தலைமுறைகளுக்கும் மேலாக வண்ணார் சமூகத்தைச் சார்ந்தவர்களே பூர்வீகக் கலைஞர்களாகவும் சிறந்த வாத்தியார்களாகவும் இருந்துள்ளது தெரிகிறது. சமகாலத்தில் இந்த வடக்கத்தி மரபில் பிற இடைநிலைச் சாதியாரும் தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்தாரும் பரவலாக இருந்து வருகின்றனர். இந்த மாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு சமூகப் பொருளாதார, அரசியல் காரணங்கள் இருக்கின்றன.
காஞ்சிபுரம் அருகில் உள்ள கீழ்வெண்பாக்கத்தைச் சேர்ந்த கோபால் நாயக்கர்; வயது 75 வன்னியர் சமூகத்தைச் சார்ந்த கலைஞர் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாள் அளித்த தகவலை இங்கு குறிப்பிடுவது அவசியம் (அந்தக் கலைஞர் தற்போது உயிருடன் இல்லை).
“பொதுவாகக் குடித்தொழில் செய்கின்றவர்கள் பூர்வீகமாகக் கூத்தாடி வருவதாகச் சொல்கின்றனர். வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்களும் அப்படித்தானா?” என்ற கேள்விக்கு,
“நான் சின்ன வயசா இருந்த காலத்தில் டோபிகளும் காலனிக்காரங்களும் அதிகம் கூத்தாடினாங்க. அப்ப, இப்ப நடக்கிறமாதிரி அதிக கூத்துங்க நடக்காது. இதில நம்ம ஆளுங்க வந்ததுக்கும் நான் கூத்துக்கு வந்ததுக்கும் அடிப்படையான காரணம்; இந்தக் கூத்தாடும் போது சடங்குங்க நெறைய இருக்கும். வேஷங்கட்டி ஆடறவங்கள தெய்வமாகவே பாப்பாங்க நம்ம ஜெனங்க. கால்ல விழும் கும்பிடும். இந்த அர்ச்சுனன் தபசு அன்னைக்கு பாக்கணும். விடிய காத்தால குளிச்சிட்டு ஈரத்துணி யோட புள்ளையில்லாத பொம்பளங்க அந்த தவசு மரத்த சுத்தி மடியேந்தி நிப்பாங்க. மேல ஏறி கூத்துக்காரன் போடற பூ, பழத்த மடியில புடிக்கிறதுக்கும்; கால்ல உழுறதுக்கும் காத்திருப்பாங்க. புள்ள பொறக்குமுன்னு தான்.
இதப்பாத்த நம்ம ஆளுங்க, ‘ஏகாலி கால்லயும் சேரி ஆளுங்க கால்லயும் போய் நம்ம பொம்பளைங்க விழணுமா? நாமளே ஆடுவோண்டா’ன்னு வந்தவங்க பலபேரு. நானும் அப்படி வந்தவந்தான். எங்களுக்கு கத்துக்குடுத்தது என்னுமோ ஒரு ஏகாலி. அப்புறம் கூத்துல கொஞ்சம் வருமானமும் வர ஆரம்பிச்சது. ராத்திரியில நோகாம நெழல்லயே கண்முழுச்சி கொஞ்சம் கஷ்டப்பட்டா போதும் வருமானம் கிடைக்கும்னு வந்தவங்களும் உண்டு” என்கிறார். இக்கருத்து இங்கு முதன்மையாக நினைவில் கொள்ளத்தக்கது.
புரிசை கிராமத்தில் உருவான தம்பிரான் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தோற்பாவை நிழற்கூத்து நிகழ்த்துநர்களாக இருந்து பின்னர் தெருக்கூத்து நிகழ்த்துநர்களாக உருப்பெற்றுள்ளனர். அதாவது வீராசாமித்தம்பிரான், இராகவத்தம்பிரான், நடேசத்தம்பிரான், கண்ணப்பத்தம்பிரான் – சுப்பிரமணியத்தம்பிரான் என்று தற்போது ஐந்தாவது தலைமுறையினராக சம்பந்தத்தம்பிரான் என்பது புரிசைக் கூத்துக் குழுவின் தலைமுறை வரலாறு. இந்தக் குழுவினரைக் குறிப்பிடுவதற்குக் காரணம், இவர்கள் பிற கூத்தர்களிடமிருந்து வேறுபட்டு அதாவது (மேற்கத்தி பாணிக் கூத்தர்கள் கூத்திற்குள் வந்தது போல) தோற்பாவை நிழற்கூத்திலிருந்து தாங்கள் தெருக்கூத்திற்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றனர். தெற்கத்தி, வடக்கத்தி பாணியைச் சார்ந்த பிற கூத்தர்கள் யாரும் இந்தக் கருத்தை முன் வைக்கவில்லை. முதல் தலைமுறையினரான வீராசாமிதம்பிரான் யாரிடமிருந்து கூத்து கற்றுக்கொண்டார் என்பது தெளிவாகவில்லை. புரிசை, வடக்கத்தி பாணிக்கூத்து செழுமையாக உள்ள செய்யாறு – வந்தவாசிக்கு இடையில் இருக்கும் ஓர் கிராமம். இவர்களது பாணி வடக்கத்தி பாணிதான் என்றாலும் வட்டார வேறுபாட்டோடு தனித்தன்மையுடன் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அப்பகுதியில் நிகழ்த்தப்பட்டு வந்த கூத்துகளின்பால் ஈர்க்கப்பட்டு, அப்பகுதியில் இருந்த ஒரு கூத்து வாத்தியாரிடம் புரிசைக்குழுவைச் சேர்ந்த வீராசாமித்தம்பிரான் தெருக்கூத்தை கற்றிருக்கவேண்டும். சுயம்புவாக, தெருக்கூத்தராக உருவாகியிருக்க முடியாது. ஏனெனில், தோற்பாவை நிழற்கூத்து – தெருக்கூத்து இரண்டு நிகழ்த்து கலைகளுக்குமான நிகழ்த்தல் நுட்பங்கள் வெவ்வேறானவை.
எனவே, வடக்கத்தி பாணியின் பூர்வீகக் கலைஞர்களாகவும் இப்பாணி சார்ந்த பிற கூத்து வாத்தியார்களுக்கெல்லாம் வாத்தியார்களாகவும் வண்ணார் சமூகத்தைச் சார்ந்த வாத்தியார்களே – கூத்தர்களே இருந்துள்ளனர் என்பது மேலே குறிப்பிட்ட கள ஆய்வுத் தரவுகள் தரும் வெளிச்சம். ஒட்டு மொத்தமாக வடக்கத்திக் கூத்து வாத்தியார்கள் அளித்த வாய்மொழித் தரவுகளைத் தொகுத்துப் பார்க்குமிடத்து பூர்வீகமாக வண்ணார், ஆதிதிராவிடர், வன்னியர் உள்ளிட்ட பிற இடைநிலை சமூகத்தவர் என இருந்த வடக்கத்தி பாணிக் கூத்தர் வரிசை சுமார், நாற்பது ஐம்பது ஆண்டுக்கு முன்பிருந்து வன்னியர், வண்ணார், ஆதிதிராவிடர் என்று மாறி யிருப்பது தெரிகிறது.
தெருக்கூத்து ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர் ரிச்சர்ட் பிராஸ்கா, திரௌபதி வழிபாட்டை ஆய்வு செய்த ஹில்ட பெய்டல் போன்றோர், ‘திரௌபதியம்மன் கோயில் சார்ந்து தெருக்கூத்து உருவாகியிருக்க வேண்டும்’ என்பது போன்ற கருத்தை முன் வைக்கின்றனர். அதற்கு, தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட நாள்கள் நடக்கும் பாரதக் கூத்துகள் காரணமாக உள்ளன. ஆனால், தெருக்கூத்தைத் திரௌபதியம்மன் கோயிலோடு மட்டும் சுருக்கி விடமுடியாது. அது பல புராணக் கதைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. வாழ்க்கை வட்ட சடங்குகள், பல்வேறு அம்மன் கோயில்கள், ஆண்தெய்வக் கோயில்களின் கொண்டாட்ட விழாக்கள், குலதெய்வ வழிபாடுகள் எனப் பல்வேறு சூழல்களிலும் தெருக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற கதைகள் தனிக்கூத்துகளாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. குறிப்பாகத் தெற்கத்தி, மேற்கத்தி பாணிகளில் மகாபாரதம் தவிர்த்த ஏரளமான கதைகள் நிகழ்த்தப் படுகின்றன. அக்கதைகள் நேற்று, இன்று உருவாக்கப்பட்ட கதைகள் என்று சொல்லிவிட முடியாது. அவையும் காலங்கடந்தவை தான். ஒருபகுதி சார்ந்த – சூழல் சார்ந்த உள்ளடக்கத்தை வைத்து ஒரு நிகழ்த்து வடிவத்தின் தோற்ற வரலாற்றைச் சொல்லிவிட முடியாது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு பகுதி, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பகுதி இடங்களில் பழம் மரபு சார்ந்த பல்வேறு கூறுகளை தன்னகத்தே கொண்டு இயங்கி வருகிறது தெற்கத்திக்கூத்து. இவ்வகைக் கூத்து பழம் மரபு சார்ந்தது என்பதற்கு அதன் ஒப்பனை, ஆடை ஆபரணங்களின் வடிவமைப்பு, அவற்றின் பயன்பாடு, குறிப்பாக இடுப்பில் கட்டப்படும் வட்டுடுப்பு முறை போன்றவை சான்றுகளாக உள்ளன. சேலைகளை ஒன்றன் மேல் ஒன்றாகக் சுருக்கி இடுப்பில் டவுறாக – வட்டுடுப்பாகக் கட்டிக் கொள்கின்றனர். தொழில் முறையாகக் கூத்து வளராத காலத்தில் , பயில் முறைக் கலைஞர்கள் – அதாவது புதிதாகக் கற்றுக்கொண்டு கூத்து ஆடும் கலைஞர்கள் அந்தந்த கிராமத்தவர்களிடமே சேலை, பாவாடை, சட்டை போன்றவற்றைப் பெற்று கூத்துப் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இன்றும் பல ஊர்களில் இம்முறை தொடர்வதைப் பார்க்கலாம். இது, அந்தந்தப் பகுதிவாழ் சமூகத்தினரையும் கூத்தோடு இணைத்துக்கொண்டு செயலாற்றும் தன்மையை உணர்த்துகிறது. தற்போது தெற்கத்தி தொழில்முறைக் கூத்தர்கள் அத்தகைய ஆடை, ஆபரணங்களை சொந்தமாக வைத்துள்ளனர். மேலும் தெற்கத்திக் கூத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளான மிருதங்கம், சுருதிப்பெட்டி, வலுவான பெரிய இரண்டு தாளங்கள், ராக – தாள வேறுபாடு இல்லாத வர்ணமெட்டுக்கள், பாத்திரங்கள் நின்ற இடத்திலேயே வேகமாகச் சுற்றும் கிறிக்கி முறை, தாள இசையோடு தொடர்ந்து வசனம் பேசும் முறை ஆகியன இக்கூத்தின் ஆதித்தன்மைகளைக் குறிக்கும் சில சான்றுகள். இவற்றை ஆதித்தன்மைகள் என்று குறிப்பிடுவதற்குக் காரணம், பிற கூத்துப் பாணிகளில் பயன்படுத்தப்படும் ‘நவீன’ நுட்பமான கூறுகள் இதில் இல்லாமல் இருப்பதேயாகும். அதாவது, ஒப்பனைக்கு எனத் தனியாக அன்றி, கிடைத்த வண்ணத்தை முகத்தில் பூசிக்கொண்டும் மக்களிடமிருந்து கிடைக்கும் ஆடைகளை உடுத்திக்கொண்டும் பாத்திரங்களாக வலம் வருதல் என்பதை சமூகத்தின் கூட்டுச் செயல்பாடு சார்ந்ததாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. மேலும் ‘சூரன்’ போன்ற எதிர் நாயகப் பாத்திரங்களுக்கு, கோழி இறகுகளைப் பயன்படுத்துதலை ஒரு தொன்மைத் தன்மை சார்ந்த ஒன்றாகக் கருத முடியும். இவை போன்ற ஒப்பனை முறை தெற்கத்திக் கூத்து மரபில் மட்டும் இன்றளவும் இருந்து வருகிறது. மேலும் இவை எவையும் நாசூக்குத் தன்மை கொண்டவையாக அல்லாமல் ‘கரடுமுரடாக’ இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளன. வடக்கத்தி பாணியின் ஒப்பனை போன்றோ, இசை போன்றோ, ஆடை ஆபரணங்கள் போன்றோ பொலிவு பெற்றதாகக் தெற்கத்திக் கூத்து மரபு இல்லை என்பது இங்கு நினைவில் கொள்ள வேண்டியது.
‘இப்படி மங்கலான அழுக்கேறியது போன்ற துணிகளை அணிந்துகொண்டு இந்த ‘நாகரிக’மான உலகத்தில் கூத்து ஆடிக் கொண்டிருக்கிறார்களே… அவர்களுக்கான பொருளாதார நெருக்கடி இதற்குக் காரணமாக இருக்குமோ?’ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், கள ஆய்வில் காரணம் அதுவல்ல என்பதும் இவ்வாறான ஆடை, அணிகல்கள்தான் அந்த பாணிக்கான மரபு என்பதும் புலனாகியது. ஒரு நாளைக்கு இருநூற்று ஐம்பது முதல் ஐந்நூறு ரூபாய், அதற்கு மேலேயும் ஊதியம் பெறும் கூத்துக் கலைஞர்களும் இதே வகையான ஆடை, ஆபரண ஒப்பனையுடன் தான் கூத்து நிகழ்த்தி வருகின்றனர்.
மேலும், ‘பொலிவாக ஆடை ஆபரணங்கள், ஒப்பனைகள் செய்து கொள்ள இவர்களுக்குத் தெரியவில்லை’ என்றோ ‘அத்தகைய கூத்துக்களை இவர்கள் பார்த்ததில்லை’ என்றோ சொல்லிவிட முடியாது. வடக்கத்தி பாணிக் கூத்துகள் செல்வாக்கு செலுத்தும் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஸ்ரீபெருமந்தூரில் சில தெற்கத்திபாணிக் கூத்துக் குழுக்கள் உள்ளன. ஆனால், அவர்களின் ஒப்பனையிலோ நிகழ்த்தல் முறையிலோ வடக்கத்தியின் சாயலைக் கூட காணமுடியவில்லை. ஆக, தெற்கத்திக் கூத்துக்கான ஒப்பனையும் இசையும் ஆட்டமரபும் அந்த பாணிக்கான பார்வையாளர்களுக்குரியன என்பது தெளிவாகிறது.
தெற்கத்தி பாணிக்கூத்தை நிகழ்த்திக்கொண்டு வரும் கூத்தர்கள் பெரும்பாலும் ஆதிதிராவிடர், வண்ணார் மற்றும் வன்னியர் சமூத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். சமகாலத்தில் கூத்து வாத்தியார்களாகவும் மேற்கண்ட சமூகத்தவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், இவர்கள் கூத்து நிகழ்த்திக் கொண்டு வரும் தலைமுறைகள் எத்தனை என்பதைக் கணக்கில் கொண்டு ஆராயுமிடத்து, தெற்கத்தி பாணியில் ஆதிதிராவிட சமூகத்து கூத்து வாத்தியார்கள் பெரும்பாலும் நான்கு தலைமுறைகளுக்கு மேலாகக் கூத்து நிகழ்த்தி வருவதாகக் கூறுகின்றனர்.
“எங்கள் பகுதியில் தற்போது கவுண்டர்கள் அதிகமாகத் தெருக்கூத்து நிகழ்த்துகிறார்கள். அவர்கள் வாத்தியார்களாவும் உள்ளார்கள். பாரதக் கூத்துகள் நிகழ்த்துவோம். ஆனால், எங்க ஆளுங்க கொஞ்ச காலமாகக் கூத்திற்குள் வந்ததாகத்தான் தெரியிது. பழைய வாத்தியார்களாக எங்கள் பகுதியில் காலனிக்காரர்கள் பலர் இருந்தார்கள். வண்ணார், பிள்ளைமார், பண்டாரம், நாவிதர் போன்றவர்களும் எங்கள் குழுவில் தற்போது உள்ளனர்.’’
(களஆய்வு: சக்கரவர்த்தி(கவுண்டர்), வயது: 64, வீடூர்(திண்டிவனம்): 29.09.2008)
“நான் மூன்றாவது தலைமுறையாகக் கூத்தாடிக்கொண்டு வருகிறேன். எங்கள் முதல் தலைமுறையைச் சார்ந்த என் தாத்தாவிற்கு எங்கள் சாதி சார்ந்த வாத்தியர்தான் சொல்லிக்கொடுத்துள்ளார். அப்போ நெறையபேர் இருந்ததாகச் சொல்லுவாங்க. ஊர் சாதிக்காரங்க தெருவில கூத்து நடத்த போனப்போ பல பிரச்சனைகள் வந்ததாவும் சொல்லுவாங்க. அதனால, நிறையபேர் ‘டிராமா’வுக்குப் போயிட்டதாவும் சொல்வாங்க. ஆனாலும் இன்றைக்கும் பல ‘ஜெதை’(குழு)கள்ல காலனிக்காரங்க இருப்பாங்க. கூத்தாடறவங்களா, மிருதங்கம் வாசிக்கிறவாங்களா இருக்கிறாங்க. எங்க ஆளுங்களுக்குத் தனியா நெறைய ஜெதைங்க இருக்குது. இன்னைக்கும் பல வாத்தியாருங்க இருக்கிறாங்க”.
(களஆய்வு: பெ. முனுசாமி(ஆதிதிராவிடர்), வயது: 75, அவனம்பட்டு (விழுப்புரம்): 29.09.2008)
“அதிமாக ஆதிதிராவிடர்கள் இருக்கிறார்கள். அதாவது, தற்போதுள்ள ஒவ்வொரு குழுவிலும் நாலைந்து ஆதிதிராவிடர்களாவது இருப்பார்கள். நான் ஐந்தாவது தலை முறையாகக் கூத்தாடுகிறேன். இவர்கள் பெண் வேசமோ, பப்பூன் வேசமோ போட்டால் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். அதேபோல் திறமையான வாத்தியார்களும் இச்சமூகத்தில் இருந்தார்கள். திண்டிவனம்- சொட்டந்தாங்கல் எனும் ஊரில் மணி என்கிற வாத்தியார் இருந்தார். அவரை எல்லோரும் வண்டிக் கட்டிக்கொண்டு வந்து பார்ப்பார்கள். அதாவது, இவரது கூத்தைப் பார்த்த கையோடு வண்டியிலேயே அவர்களுடைய ஊரில் கூத்தாட அழைத்துக்கொண்டு போவார்கள். அதேபோல மோகனூர் முனுசாமி, பாதிராப்புலியூர் சாமிநாதன் என்று பலரும் இருந்துள்ளார்கள். இவர்கள் பேர் பெற்றவர்கள். நிறைய வாத்தியார்களை இவர்கள் உருவாக்கினார்கள். இப்போது வன்னியர்கள் பலர் கூத்தாடுகிறார்கள். குழுக்களும் உருவாக்கியுள்ளார்கள். இப்போது வருமானமும் நிறைய கிடைக்கிறது.
(களஆய்வு: க. தேவராஜ் (ஆதிதிராவிடர்), வயது: 52, தென்நெற்குணம் (திண்டிவனம்): 18.10.2009)
மேலும், பல வாத்தியார்களின் தரவுகளை வைத்துப் பார்க்கும் பொழுது தெற்கத்தி பாணியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பல தலைமுறைகளாக அதாவது, பூர்வீகக் கலைஞர்களாக இருந்து வருவது தெரிகிறது.
ஆக, தெற்கத்தி பாணி கூத்துக்கலைஞர் மரபு என்பது ஆதிதிராவிடர், வன்னியர் மற்றும் பிற இடைநிலை சமூகத்தார், என்ற நிலையிலிருந்து தற்போது வன்னியர், ஆதிதிராவிடர் மற்றும் பிற இடைநிலை சமூகத்தார் என்பதாக மாற்றம் பெற்றுள்ளது தெரிகிறது.
இங்கு நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த பாணிக்கான நிகழ்த்தல் முறையை சாதி சார்ந்ததாகவோ பொருளாதாரம் சார்ந்தாகவோ சுருக்கிப் பார்த்து விட இயலாது என்பதுதான். எந்த ‘நாகரிக’ சாதியைச் சார்ந்தவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள், இவ்வகைக் கூத்தை நிகழ்த்தினாலும் இதே முறையில் தான் நிகழ்த்தியாக வேண்டும். அது பார்வையாளர்களின் விருப்பம், பார்வைப் பழக்கம் சார்ந்த ஒன்றாகும். சிறிது மாற்றி புதிய முறையில் நிகழ்த்தினாலும் தெற்கத்தி பாணி சாந்த பார்வையாளர்களின் ஆதரவு அந்தக் கூத்திற்கு அற்றுப்போகும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
சேலம், தருமபுரி, நமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் தெருக்கூத்து மரபு மேற்கத்தி பாணி என்று வகைப்படுத்தப்படுகிறது. இந்த பாணி சார்ந்த கலைஞர்கள் இருவேறு பின்புலங்களைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அதாவது, ஒரு மரபினர் தோற்பாவை நிழற்கூத்து, பொம்மலாட்டம் போன்ற வடிவங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தவர்கள், பின்னர் தெருக்கூத்தர்களாக மாறியுள்ளதாகவும் மற்றொரு மரபினர் தென்னாற்காடு, வடஆற்காடு பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து தருமபுரி மாவட்டப் பகுதிகளில் குடியமர்ந்தார்கள். அவர்கள் வழியாகக் கற்று தெருக்கூத்தாடுவதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறெனில் அப்பகுதியில் பூர்வீகமானத் தெருக்கூத்துக் கலைஞர்கள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. தெருக்கூத்து நிகழ்த்தப்பட்டு வரும் மேற்கு மாவட்டங்களில் வாழும் சமூகங்களையும் சமகாலத்தில் தெருக்கூத்தை நிகழ்த்திவரும் கலைஞர்களையும் இணைத்துப் பார்க்குமிடத்து இது தெளிவாகும். அருந்ததியர், ஆதிதிராவிடர், குறவர், கவுண்டர், வன்னியர், வெள்ளாளர், முதலியார் போன்ற சமூகத்தவர்கள் இப்பகுதியில் கூடுதலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் அருந்ததியர், குறவர், ஆதிதிராவிடர், வன்னியர் சமூகங்களைச் சார்ந்தவர்கள் பரவலாகத் தெருக்கூத்துக் கலைஞர்களாக இருந்து வருகின்றனர். மற்ற சமூகத்தவர்கள் கூத்தில் குறைவாகவே காணப்படுகின்றனர். மேற்சுட்டிய கலைஞர் சமூகத்தவர்களின் வழிபாட்டிற்கும் சடங்கியல் நிகழ்வுகளுக்கும் காலம் காலமாகக் கூத்துகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சமூகம் சார்ந்த தோற்றக் கதைகள் இக்கருத்தை உறுதி செய்கின்றன.
“பொதுவாகக் கூத்து குழுக்களில் எல்லா சாதி ஆட்களும் இருப்பார்கள். பறையர், வண்ணார், நாவிதர், சக்கிலியர் என்று எல்லோரும் இருக்கிறார்கள். அதாவது, முக்கால்வாசி நாடகத்தை நாங்கள் சேரியில் தான் நடத்துவோம். இவர்கள் தான் அதிகம் விரும்புபவர்களாக இருக்கின்றனர். இப்பொழுது கவுண்டர்கள், படையாட்சி சமூகத்தவர்கள் மாமூலமாக நாடகம் விடுகிறார்கள். எங்களை மதிப்பதில்லை”.
(களஆய்வு: ரமேஷ்(குறவர்), வயது: 26, அம்மாபேட்டை (ஈரோடு): 19.03.2008)
“எங்கள் பகுதியில் சாதிப்பிள்ளை அதாவது சக்கிலி, அடுத்து பறையர், குறவன் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் அதிகம். இவர்களுக்குத் தான் நாலைந்து தலைமுறைகள் கொண்ட கூத்தாடிப் பரம்பரை உள்ளது. வன்னியர்களும் பிற சாதிக்காரர்களும் இப்போது இருக்கிறார்கள்”.
(களஆய்வு: பி. ராமு (குறவர்), வயது: 41, அம்மாபேட்டை (ஈரோடு): 19.03.2008)
“முதன் முதலில் குறவன் என்கிற சமூகத்திலிருந்து தான் நெடிய பெரிய பரம்பரை உள்ளது. இவர்களிடமிருந்து தான் பின்னாளில் வன்னியர்கள் கூத்து கற்றுக்கொண்டு தனிக்குழுக்களாகப் பிரிந்து செய்தார்கள். ஆக, குறவன் சமூகம் மற்றும் குறவன் இனத்தின் ஒரு பிரிவான ‘ஒண்டிப்புலி’, அடுத்து பறையர், அருந்ததியர் என்கிற மூன்று பிரிவினருமே அதிகமிருக்கிறார்கள். இங்கிருக்கும் பிற சாதியினரின் குழுக்களிலும் இந்த மூன்று சாதியைச் சேர்ந்தவர்கள் ஒரு சிலராவது இருப்பார்கள். நீங்கள் வேண்டுமென்றால் கணக்கெடுத்துப் பாருங்கள”.
(களஆய்வு: பெருமாள் (செட்டியர்), வயது: 56, அம்மாபேட்டை (ஈரோடு): 19.03.2008)
மேற்குறிப்பிட்ட தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, மேற்கத்தி பாணிக் கூத்து மரபில் சமகாலத்தில் குறவர், அருந்ததியர், பறையர், வன்னியர் என்கிற கலைஞர்களின் படிநிலையைக் காண முடிகிறது. இதற்கு முந்தையை நிலையிலும் இதே படிநிலை இருந்ததாக கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கத்தி பாணிக்கூத்துகள் தெற்கத்தி மற்றும் வடக்கத்தியைக் கலந்ததாகத் தோன்றுகிறது. மேற்கு மரபின் ஒப்பனை தனித்தன்மையானது. மகாபாரதக் கூத்துக்களில் வரும் தலைமைப் பாத்திரங்கள் ஒரு சிலவற்றிற்குக் கட்டையால் ஆன அணிகலன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற பாத்திரங்கள் அனைத்திற்கும் ‘ஸ்பெஷல்’ நாடகத்தில் பயன்படுத்தப்படும் ‘பாஸ்கோட்’, காற் சட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய ஒப்பனை மரபை மேற்கத்திக் கூத்தர்கள் ‘நாகரிமானது’ என்று கூறுகின்றனர். மிருதங்கம், முகவீணை, சுருதிப்பெட்டி போன்றன இசைக் கருவிகளாக உள்ளன. முகவீணை வடக்கத்திக் கூத்து மரபில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தக் குறுங்குழல் இறப்புச் சடங்குகளில் பறைமேளத்தோடு இணைத்து வாசிக்கப்படும் ஒரு கருவி இப்பகுதிகளில் உள்ளது. அதை அருந்ததியர் மற்றும் பறையர் சமூகத்தவர் இசைக்கின்றனர். இங்கு கூத்தில் அது முகவீணை என்பதாகப் பயன்படுத்தப்படுகிறது. வடக்கத்திக் கூத்தில் முகவீணை நாவிதர் சமூகத்தைச் சார்ந்தவர்களால் மட்டுமே மரபாக இசைக்கப்படுவது குறிக்கத்தக்கது.
மேற்கத்தி பாணியில்; குறவர், பறையர், அருந்ததியர் போன்றோர், தெருக்கூத்து நிகழ்த்திக் கொண்டிருப்பதும் அவர்களுக்கென்று தனிச்சூழல் இருப்பதும் தெரிகிறது. மாரியம்மன், அய்யனார், செல்லியம்மன், அங்காளம்மன், மகமாயி, காளி, வீரபத்திரன், மதுரைவீரன், பச்சையம்மன், முனியப்பன், பொன்னியம்மன், துளுக்கானத்தம்மன், பெருமாள், முருகன் போன்ற தெய்வங்களின் கோயில்களில் பரவலாகத் தெருக்கூத்தை நிகழ்த்துகின்றனர். அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற கதைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மகாபாரதக் கதைகளை திரௌபதியம்மன் கோயில் விழாக்களில் நிகழ்த்துகின்றனர்.
மேற்கத்தி பாணியாகக் கொள்ளப்படும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திருவண்ணாமலை, திண்டிவனம் சார்ந்த சாயல் அதாவது, வடக்கத்தி மற்றும் தெற்கத்தி பாணிகளின் வட்டார சாயல் காணப்படுகிறது. வடக்கத்தி, தெற்கத்தி பாணிப் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து சென்றவர்களின் வழி வந்த மரபாக இதைக் கொள்ளலாம்.
ஆக, தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் சார்ந்து நிகழ்த்தப்பட்டு வரும் தெருக்கூத்து மரபுகளில் தெற்கத்தி, வடக்கத்தி மற்றும் மேற்கத்தி என்கிற மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. அதோடு ஒவ்வொரு பிரிவும் தனித்தன்மையான இசை(மெட்டு, கருவி இசை), ஒப்பனை, ஆட்டம், நடிப்பு முறை, வசன வெளிப்பாடு, கதை, கலைஞர்கள் ஆகிய மரபுகளை நீண்ட நெடுங்காலமாகக் கொண்டிருக்கின்றன என்பது தெரிகிறது. குறிப்பாக, வடக்கத்தி பாணியில் தொடக்க காலங்களில் வண்ணார், ஆதிதிராவிடர், வன்னியர் என்றிருந்த கலைஞர்கள் படிநிலை சமகாலத்தில் வன்னியர், வண்ணார், ஆதிதிராவிடர், இன்னபிற இடைநிலைச் சாதிகள் என்பதாகவும் தெற்கத்தி பாணியில் ஆதிதிராவிடர், வன்னியர், பிற சமூகத்தார் என்றிருந்த படிநிலை தற்போது வன்னியர், ஆதிதிராவிடர், பிற சமூகத்தார் என்றும் மேற்கத்தியில் குறவர், அருந்ததியர், ஆதிதிராவிடர், வன்னியர் என்கிற படிநிலை இன்றும் தொடர்வதையும் கண்டறியமுடிகிறது. சமகாலத்தில் தெருக்கூத்து மரபுகளுக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களையும் பிற சமூகத்தவர்கள் இணைதல்களையும் சமகால அரசியல், சமூகப் பொருளாதாரம் சார்ந்து நிகழ்ந்தவையாகப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, இவைகள் தான் மரபின் நீட்சி என்று கொள்வதிற்கில்லை. இசை, ஒப்பனை, ஆட்டமரபு, பனுவல்களின் பயன்பாடு, நிகழ்த்துமுறை ஆகிய கூறுகளை ஒப்புநோக்கிப் பார்க்குமிடத்து தெருக்கூத்தில் உள்ள மூன்று பாணிகளுள் தெற்கத்தி பாணியைப் பழமையான மரபாகவும் அதற்கடுத்த நிலைகளில் வடக்கத்தி, மேற்கத்தி பாணிகளையும் கொள்ள வாய்ப்புள்ளது.
முனைவர் கோ. பழனி
இணைப் பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னை பல்கலைக்கழகம்
சென்னை
தமிழ் நாடு, இந்தியா.