கோ. பழனி
கதை என்பது,
கதையெனப் படுவது கழறுங் காலை
பஃறலைப் பட்ட பண்புடைத்தாகிப்
பொய்யுரை, மெய்யுரை, புனைந்துரை யெனஅ
முத்திறப் படுமென மொழிந்தனர் புலவர்
* பொய்யுரை என்பது Original Plot என்பர். நாடகப் பனுவல் ஆசிரியர் தன் கற்றலினால் மெய் போல் படைத்துக் காட்டும் பனுவல் (கலாவதி, -ரூபாவதி)
* மெய்யுரை – வரலாற்று நாடகங்கள் – Historical Plot..
* புனைந்துரை – Mixed Plot – மெய்யுரையிலிருந்து சிறிது விலகி பொய்யுரையும் கலந்து புனைந்துரைத்தல். (வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரி, 2004: 24, 25).
சங்க கால அரசியல்;
- · மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்
· சேர நாட்டுப் பழங்குடிகள்: குடவர் (குட்டுவர்), அதியர், மலையர், மழவர், பூழியர், வில்லோர், கொங்கர், குறவர்.
· பாண்டிய, சோழ நாட்டுப் பழங்குடிகள்: பரதவர், கோன்
· தனித்தவர்கள்: ஆவியர், ஓவியர், வேளிர், அருவர், இடையர், அந்தர்
· தமிழ் நிலங்களை அண்டி வாழ்ந்த பழங்குடிகள்: கொண்டையர், களவர், வடுகர்.
· கிழார்கள், சிற்றரசர்கள், பழங்குடித் தலைவர்கள்
மேற்சுட்டிய அரசியல் கலைவர்களை அண்டிதான் நிகழ்த்துநர்கள் நிகழ்த்தியுள்ளனர். அகம், புறம் சார்ந்த நிகழ்த்து கலை மரபையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சடங்கியல் சார்ந்தும் கொண்டாட்டம் சார்ந்தும் கூத்துகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
பாடுநர்
சங்க நூல்களில் பாடுநர்களாக பாணர், பொருநர், அகவுநர், புலவர், கோடியர், வயிரியர், கண்ணுளர், விறலியர் அறியப்படுகின்றனர்.
பாணர், யாழ் இசைஞர்களாகவும் அறியப்படுகின்றனர். மேலும் இவர்கள் தனித்து நிகழ்த்துவதில்லை. இவர்களுடன் பாடினி இணைந்தே உள்ளாள்.
இவள் இக்குழுவின் உறுப்பினள் (புறம்: 11, 66, 319). இவள் விறலி என்றும் அழைக்கப்பட்டாள். சில இடங்களில் மட்டுமே பாடினியாகக் குறிப்பிடப்பட்டுள்ளாள் என்றாலும் இவள் ஆடுமகளே. குடும்பமாகச் செயல்பட்டுள்ளனர். விறலி ஆடும்போது பாணன் பாடியதை,
நிலவின் அன்ன வென்வேல் பாடினி
முழவின் போக்கிய வெண்கை
என்கிற பதிற்றுப்பத்து (61) பாடல் வரிகள் மூலம் அறிய முடிகிறது.
ஆடலும் பாடலும் பிரிக்க முடியாத அம்சங்களாக சங்க காலத்தில் இருந்துள்ளது. இப்பாடல்கள் புகழ்ச்சிப் பாடல்களாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
அகவுநர்: அகவு – கூவி அழைத்தல். அவர்கள் தங்கள் பாடல்களை எவ்வாறு எடுத்துரைத்தனர் என்பதை இச்சொல் உணர்த்துகிறது.
கோடியரும் விறலியரும் இசைக் கருவிகளோடு இணைத்துச் சொல்லப்படுகின்றனர். கண்ணுளர் என்போரை சாந்திக் கூத்தர் என்றும் சொல்வார்கள். சாந்திக் கூத்து 12-ஆம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.
புறநானூறு 153 -வது பாடலின் இறுதி வரியான, “ஆடலும் ஒல்லார் தம்பாடலும் மறந்தே” என்பதில் பாடலை மனப்பாடம் செய்திருந்தனர் என்பதை ஊகிக்க முடிகிறது.
பொருநர் – கூத்தர் என்பதாக திவாகரம் (8-ஆம் நூ.) கூறுகிறது. “பொராப் பொருநர்” (புறம்: 386) என்பதாகச் சுட்டப்படுகின்றது. வீணை, தடாரி இசைக்கருவிகளோடு இணைத்துப் பேசப்படுகின்றர். பொருநன் விடியற்காலைப் பொழுது அரண்மனை வாயிலின் அண்டை நின்று பாடினான் என்று புறம்: 390, 392 -ஆம் பாடல்கள் உணர்த்துகின்றன. பொருநர் குழுவினர் மிகவும் வறுமைப்பட்ட குழுவினராகக் காட்டப்படுகின்றனர். கிணைமகள் தூண்டிலில் மீன்பிடித்து விற்று புளிக்கூழ் சமைத்து வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிறாள் (புறம்: 399).
கள வேள்வி
போரியல் வாழ்வியல் ‘களவேள்வி’ என்கிற சடங்கு முறை முக்கியத்துவம் வாய்ந்தது. போர்க்களத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. மாண்ட வீரரின் தலைகளை அடுப்பாக வைத்துச் செய்யப்படும் அறுக்கப்பட்ட தோள் மூட்டுடன் சேர்த்த கைகளை அகப்பையாக உபயோகித்த முறைமை – புறம் : 26, 372, ம. கா: 24: 127 – 130 வரிகள் உணர்த்தி நிற்கின்றன.
வேள்வியின் போது அரசனும் சேர்ந்து ஆடியதாக அகநானூறு 142வது பாடல் சொல்கிறது. குறிப்பாக அதிகனை வீழ்த்திய பின் மிஞிலி தன் போர்வீரர்களோடு சேர்ந்து ஆடியதாகக் குறிக்கிறது.
இந்த சடங்கு போர்க்களம் சார்ந்து நிகழ்த்தப்பட்டுள்ளது. புறநானூறு 372 ஆம் பாடல் இச்சடங்கை;
“பகைவர் உடலினின்றும் நீங்கிய தலைகளாற் செய்யப்பட்ட அடுப்பில் கூவிளங்கட்டை விறகிட்டெரித்து ஆக்கப்படும் கூழிடையே வரிக்குடவர்கள் பிறழ்ந்து பொங்க அவ்வயிற் பொருந்தாது நீங்கிய மண்டையோட்டை அகப்பையாயும் வன்னிமரத்தின் கொம்பை அதிற் செருகப்பட்ட காம்பாகவும் கொண்ட துடுப்பினால் ஈனாத பேய்மகள் தோண்டித் துழவி அட்ட பிண்டத்தை வாலுவன் ஏந்திக் கொற்றவைக்குப் படைக்கிறாள். திருமண நாளிற்போல, புதிதாய் வந்தவர்களெல்லாம் நீர்தெளிந்து புலால் நாறும் போர்க்களம் விளங்கக் களவேள்வி செய்தவனே” என்று தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் போற்றிப்பாடுகிறது.
போர்க்களத்தில் பிணங்களிடையே நிகழ்த்தப்படும் ஒரு சடங்காகவும் குழு நடனமாகவும் விளங்கும் களவேள்வி நன்றி தெரிவிக்கும் ஒன்றாக விளங்குகிறது. சமகாலத்து ‘மயான கொள்ளை’ என்ற சடங்கு நிகழ்த்தலை மேற்சுட்டிய களவேள்வி என்பதின் தொடர்ச்சியாகப் பார்க்கமுடிகிறது.
வெறியாட்டு
அகமரபு சார்ந்த ஒரு சடங்கு. காதல் கொண்ட பெண்ணொருத்தியின் தாய், தன் மகள் பசலைப் பூத்து மெலிந்து போவது கண்டு அவளது காதலை அறியாது, அவளது இந்நோய்க்குக் காரணம் முருகன் என்று எண்ணி வேலனை அழைத்து (வேலன் – இச்சடங்கை நடத்தக் கூடியவன்) பூசை செய்கிறாள். வேலன் வெறிகொண்டு ஆடி அவளது இந்நிலைக்குக் காரணம் முருகனே என்று உரைக்கிறான்.
இச்சடங்கு முதுவாய்ப் பெண்டிராலும் நடத்தப்பட்டுள்ளது (அகம்: 98, நற்: 288). இச்சடங்கின் போது களத்தைத் தயார் செய்தல் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அந்த இடம் மன்று என்றும் பலிமுன்றில் என்றும் அருவி அல்லது மணற்பாங்கான இடமாகவும் இது உள்ளது.
பாடல்கள் பாடி (அகம்: 138) வாத்தியங்களின் இசைக்கு ஏற்ப வேலன் முருகனை வேண்டிப் பாடுவான் (நற்: 51). இந்நிகழ்வின்போது இறுதியில் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடி முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளனர் (அகம்: 382).
குரவைக் கூத்து
குரவைக் கூத்தே கைகோர்த்தாடல் காமமும் வெற்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின் மரேனும் கை பிணைந்தாடுவது – என்று அடியார்க்கு நல்லார் உரை எழுதுகிறார்.
ஒருவரை ஒருவர் தழுவி ஆடுவது. தலைவியை அழைத்து ‘கொண்டு நிலை’ பாடும் படி கூறுகிறாள். கொண்டு நிலைக்கு நச்சினார்க்கினியர் உரை செய்யும் போது, ‘ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டு கூறுதலிற் கொண்டு நிலையாயிற்று’ என்கிறார். பல்வேறு குரவைகள் சுட்டப்படுகின்றன.
-
· போர்வீரரின் போர்க்களக் குரவை (புறம்: 22)
· பரதவர் கள்ளுண்டு ஆடும் குரவை (புறம்: 24)
· கள்ளுண்ட குறவரின் குரவை (புறம்: 129)
· நெய்தல் மகளிர் குரவை (அகம்: 20, பதி. ப: 73)
நெய்தல் நிலப் பெண்கள் தங்கள் ஆட்டத்தின்போது, தங்கள் கணவன்மார்களின் நேர்மையற்ற தன்மையினைப் பாடியுள்ளனர் (அகம்: 339)
· ஆயர் குரவை (கலி: 102, 103, 104…) - எனப் பலவகையான குரவை சுட்டப்படுகிறது.
தைந் நீராடல் ஊர்வலத்தின் இறுதியில் ஆடப்பட்டது போல், குரவை ஆட்டம் பல்வேறு சூழல்களில் ஆடப்பட்டுள்ளது. குரவை என்பதை முன்தேர்க் குரவை என்று புறம்.371 ஆம் பாடலை உதாரணம் காட்டி விளக்குகிறார் இளம்பூரணர். அதே பாடலை பின்தேர்க் குரவைக்கு நச்சினார்க்கினியர் உதாரணமாக எடுத்துக்காட்டுகிறார். அதாவது, தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாகத் தேர்த்தட்டிலே நின்று போர் வீரரோடு கை பிணைந்தாடும் குரவை என்கிறார் நச்சினார்க்கினியர். தேரின் முன்னே நின்றாடிய குரவை என்கிறார் இளம்பூரணர். ஆக, ஆட்டம் என்பது ஒன்றாகவே இருந்துள்ளது. அது ஆடப்படும் களத்தைக் கொண்டு ‘முன்தேர்’, ‘பின்தேர்’ என்பதாக வரையறுத்துக் கொள்ளப்படுகிறது.
ஒரு சூழலில் போர்களம் – அமர்க்களம் என்பது குரவைக்கான ஆடுகளமாகவும் வெற்றிபெற்ற வேந்தனின் புகழுரை என்பது அதன் பனுவலாகவும் இருந்திருக்கிறது. சமகாலத்தில் வெற்றிக்களிப்பு கொண்டாட்ட ஊர்வலங்கள் தெய்வச்சிலை ஊர்வலங்கள், வாழ்க்கை வட்டச் சடங்கு ஊர்வலங்களில் முன்னும் பின்னும் ஆட்டங்கள் நிகழ்வதைக் காணலாம். திவாகர நிகண்டு குறிப்பிடுவது போல, “குரவைக் கூத்தே கை கோர்த்தாடல்” என்கிற ஆடல் மரபு இன்றளவும் பழங்குடி மக்கள் தொடங்கி பலராலும் ஆடப்பட்டு வருவதைக் காணமுடிகிறது.
ஆடுகளம் சார்ந்து மட்டுமல்லாது ஆடப்பட்ட சமூகம் சார்ந்தும் குரவை ஆட்டம் பெயர்ப்பெற்றுள்ளது. கலித்தொகை 39 ஆம் பாடல், பெண் ஒருத்தியைக் கணவனுடன் சேர்ப்பிக்க மலைத்தெய்வத்தை வேண்டி குறத்தி, குரவை ஆடியதாகக் குறிப்பிடுகிறது. ‘வேட்டுவர் குரவை’ப் பற்றி திருமுருகாற்றுப்படை (194 -7) கூறுகிறது. கானவர் கள் குடித்து சிறுபறை முழங்கி குரவை நிகழ்த்தியதாகச் சொல்லப்படுகிறது.
‘ஆயர்கள் குரவை’ ஆடியதைக் கலித்தொகை(102 ,106) பதிவு செய்துள்ளது. ஏறு தழுவிய பின் ஆண்களும் பெண்களும் சேர்ந்து குரவையாடியுள்ளனர். இங்கு பாடலும் பாடியதாகச் சொல்லப்படுகிறது. சிலம்பிலும் ஆய்ச்சியர் குரவை இடம் பெற்றுள்ளதைப் பார்க்கலாம். குரவை எருமன்றத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆயர் குரவை
ஏறு தழுவியபின் ஆண்களும் பெண்களும் குரவை ஆடியுள்ளனர். குரவை ஆடும்போது முதலாமவர் வென்றவனையும் அவனது காதலியையும் பாடும்படி கூறுகிறார். பெண்கள், மரபு வழியான பாடல் பாடியதாக, “குரவை தழீஇய மரபுளி பாடி” (கலி: 103) என்ற வரி உணர்த்துகின்றது. அதாவது, “யாஞ்சுற்றத்தார் கூறும் முறைமையைப் பாடி குரவைக் கூத்தாடி” என்பதாகும். இது கூத்து நிலைப்பட்ட ஆடலாம். சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை நிகழ்த்தப்பட்டமையைக் கூறுகிறது.
நகைக் கூத்து
விதூடக் கூத்து என்றும் இசைபட ஆடும் போது வென்றிக் கூத்து என்றும் கூறுவர்.
இகழ்ச்சி பொருந்தவேனும் புகழ்ச்சி பொருந்தவேனும் விதூஷகன் சபையின் கண் நகைச்சுவை தோன்ற ஆடுவது – (157).
கருங்கூத்து
வாழ்க்கை அதுவாகக் கொண்ட முதுபார்ப்பான்
வீழ்க்கைப் பெருங் கருங்கூத்து (கலி: 65)
நச்சினார்க்கினியர் (கி.பி. 16-ஆம் நூற்றாண்டு) உரை, ‘எந்நாளுந் தன் தொழில் அவ்வாறு தனி நிற்கும் மகளிரைக் கண்டாற் தன் காம வேட்கையின் மேல் விழுந்தலாகக் கொண்ட முதிய பார்ப்பானுடைய விரும்புதலையுடைய பெரிய தண்ணிய நாடகம்’ என்கிறார்.
இங்கு முதிய பார்ப்பான் செய்கை கருங்கூத்தாக் கொள்ளப்பட்டுள்ளது. பெருந்திணை சார்ந்த கருத்துக்கள் அடங்கிய கதைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று கொள்ளலாம். கருங்கூத்திற்கு வெறியாட்டை உதாரணமாகக் காட்டியுள்ளார் நச்சினார்க்கினியர். இழிந்தோர் கூத்து என்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
வாடாவள்ளி
வாடாவள்ளி என்பது ஆடலை உள்ளடக்கிய வளமைச் சடங்கு என்று கூறப்படுகிறது.
வாடாவள்ளியின் வளம்பல தருஉம்
நாடுபல கழிந்த பின்னை
என்று இளந்திரையனிடம் ஒரு பொருணனை ஆற்றுப்படுத்தும்போது உருத்திரக்கண்ணனார் கூறுகிறார். இதற்கு உரை எழுதும் நச்சினார்க்கினியர் இருபாலரும் ஆடிய ஆடல் என்றும் இதை இழிந்தோர் காண்பர் என்றும் கூறுகிறார். தொல்காப்பிய புறத்திணையியலில் எல்லா நிலங்களுக்கும் பொதுவான புறத்துறைகள் ஒன்றாகக் கூறப்படுகிறது. உரை வகுக்கும் இளம்பூரணர் இதைக் கூத்து என்கிறார். நச்சினார்க்கினியர்,
மண்டமரட்ட மறவர் குழாத்திடைக்
கண்ட முருகனும் கண்களித்தான் – பண்டே
குறமகள் வள்ளி தன் கோலம் கொண்டாடப்
பிறகே ணோற்றாள் பெரிது
எனும் பாடலை எடுத்துக்காட்டுகிறார். இதன் வழி முருகன் – வள்ளி திருமணத்தைத் திரும்ப நிகழ்த்தியதாகக் கொள்ள முடிகிறது. இக்கூத்தை இழிந்தோர் காண்பதாகக் கூறுகிறார். இதில் பாலியல் சார்ந்த உரையாடல்கள் இருந்திருக்கலாம் என ஊகிக்க வாய்ப்புள்ளது.
போலச் செய்தல்
நிகழ்த்து முறைகள் குறித்து அகம் 206 -வது பாடல்;
—————————- நன் மகிழ்ப்
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப
என்பது ஒருவர் மற்றொரு ஆளாக மாறி நடித்ததைச் சுட்டுகிறது. ‘மற்றொரு ஆளாக மாறுதல்’ ‘போலச் செய்தல்’ என்பதைக் காட்டுகிறது.
கலித்தொகை நெடும்பாடல் மரபைக் கொண்டது. கலித்தொகையில் 32 பாடல்கள் உரையாடல் தன்மை கொண்டவை என்று கா. சிவத்தம்பி எடுத்துக் காட்டுகிறார் (2004: 262)
பனுவல் – உரையாடல்
எந்தக் கலைவடிவத்திற்கும் ஏதோ ஒரு வகையான எழுதப்பட்ட /எழுதப்படாத பனுவல் நிகழ்த்துநர்களால் பின்பற்றப்படுகிறது. ஆட்டங்களின் அடவு முறைகள் (Steps) கூட ஏதோ ஒரு வகையான பனுவலைக் கொண்டிருக்கிறன. அவை வாத்தியார்களின் வழி வந்தவை. நாடகம், கூத்து போன்ற நிகழ்த்தலுக்கான – குறிப்பாக ஆடுகளத்தில் பாத்திரங்கள் தோன்றி உரையாடுவது போன்ற நிகழ்த்தல் மரபை சங்கப் பாடல்களில் காணமுடிகிறது. குறிப்பாக, கலித்தொகையில் முழுமையான உரையாடல் தன்மையைக் காணமுடிகிறது. நாடக, கூத்து நிகழ்த்தல் பனுவலுக்கு ‘முரண்’ அவசியமாகிறது. அந்த முரணைக் கொண்டே உரையாடல் நகரும். ‘தர்க்கம்’ என்பது தெருக்கூத்தில், ’ஸ்பெஷல்’ நாடகத்தில் மிக முதன்மையான பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன.
கலித்தொகை 112-ஆவது பாடல் கைக்கிளையாக சொல்லப்படுகிறது. தலைவி தலைவனுக்கு இடையே நடக்கும் தர்க்கம்.
தலைவி: என்னைத் தடுக்க யார் இவன்? கல்லாப் பொதுவனே! பேசாமல் போ. என் வீட்டார் உன்னோடு சில பேசவேண்டு்ம் என்றார். (எச்சரிக்கை)
தலைவன்: என் வீட்டார், ‘எல்லா! கண்களால் மனதைக் கலக்கி காமநோய் செய்யும் கரும்பு எழுதிய தோளையுடைய மகளிரைக் கண்டால் விடாதே’ என்று சொன்னார்கள். (கிண்டல்)
தலைவி: அவ்வாறு கூறியோர், மகளிரைக் கண்டால் விலக்கி, நயந்து, அவர்தம் கண்ணையும் தோளையும் புகழ்ந்து பாட நல்ல தொழில் கற்பித்தார்கள்! உன்னைச் சேர்ந்தோர் பெரிதும் வல்லவர். (இகழ்ச்சி)
தலைவன்: ஓஓ! வெயிலின் சூட்டில் யாரும் நடமாடாத இந்த உச்சிவேளையில் கன்று மேய்ப்பவளைப் போல நீ (பிறர்க்கு நோய் செய்து திரிவதை அறிந்தவர்கள்) இப்படித் திரிகிறாய் என்று கூறாதிருந்தால் எம்வீட்டார். என்னை இகழ்வாரன்றோ? (கேலி)
தலைவி: எல்லா! நீ கூறியது போதும். இது பொய்யென்பதை நானறிவேன். போய்விடு (கோபம்).
தலைவன்: விடமாட்டேன். நான் கூறியதைப் பொய் என்று நீ கருதியது ஏன்? உன் வீட்டார் உன்னை என்முன் நின்று பேசக்கூடாதென்று சொன்னாரேயன்றி நீ என்னைத் தழுவக்கூடாதென்று அவர் சொன்னாரோ? இல்லை யல்லவா? ஆதலால் நீ என்னை மெல்ல முயங்கு நான் உன் வாயில் முத்துவேன். (முள் எயிறு உண்கும்)ஞ் என்ன சரிதானோ? (சாமர்த்தியம்).
தலைவி: (தனக்குள்ளே) மாயப்பொதுவன் உரைத்ததெல்லாம் உண்மையாவது என்றால் அவனோடு வாழ ஒப்புவேன். அவை பொய் என்றால் தலைவனின் மார்பில் கமழ்ந்த தார்மாலையைக் குழைத்த உன் கண்கள் பசலை எய்த, தோள்கள் மெலிந்தாலும், அவை அழகுடையவையே (தீர்க்கம்).
இப்பாடலின் ஒவ்வொரு பேச்சும் குறிப்பிட்ட மெய்ப்பாட்டின் புலப்பாட்டைக் கொண்டு அமைவது ஒரு சிறப்பு. ( ராஜ்கௌதமன்; 2011: 132, 133).
மற்றொரு காட்டு, 108 ஆவது பாடல். ஆயமகளுக்கும் ஆயனுக்கும் நடக்கும் உரையாடல். இந்தப் பாடலில், ‘என் நிலை அறியாது மோர்விற்றுத் திரிகிறாயே!’ என்பது போல் ஆயன் கேலி செய்கிறான். அதற்கு ஆயமகள், ‘மோர் விற்றுத் திரிவது ஒன்றும் இழுக்கல்ல; மாடுகளுக்கு முன் ஒரு கோலை ஊன்றி நிற்கும் நீ மட்டும் என்ன சூரியனின் மகனோ?’என்று எதிர் வாதிடும் இப்பாடலின் உரையாடலில் பகுதி,
ஆயமகள்: உன் நெஞ்சைக் களமாய்க் கொண்டு நான் ஆள்வது எனக்கு எப்படி எளிதாகும்? உன்னுடைய நெஞ்சு, புனத்தில் உள்ள என் தமையனுக்கு உணவு கொண்டு கொடுக்குமா? ஆ இனத்திலுள்ள என் தந்தைக்குக் கறவைக் கலயம் கொண்டு போகுமா? தினை அரிதாளில் தாய் மேயவிட்ட கன்றுகளை மேய்க்குமா?
ஆயன்: நீ ஏவிய தொழில்களை அப்படியே என் நெஞ்சு செய்வதாக. மோர் கடைகிற ஓசை அருகில் கேட்பதால் நீ போகவேண்டிய ஊர் தூரமாக இல்லை. அருகில்தான் இருக்கிறது. இப்போது நண்பகற்பொழுது, இந்த உச்சிவெயிலோடு விரைந்து நீ போகவேண்டுமா? அதோ அங்கே காயாம் பூக்கள் பூத்த பொழிலைப் பார். அங்கே பாறைப் பக்கமாக உள்ள தெளிந்த சுனைநீரில் நீராடி முல்லைப் பூக்கள் பறித்து என்னோடு தங்கிப் பொழுது குளிர்ந்த பிறகு உன் ஊருக்கும் போவாயாக!
ஆயமகள்: சரி. நான் புறப்படுகிறேன். மான்போல் கண்கள் கொண்ட ஆய்த்தியர் போல மயக்கும் உன் சொற்களுக்கு மயங்குபவரிடம் இதைச் சொல்லு. நீதான் பல பசுக்களைத் தெவிட்டாமல் கூடுகின்ற காளைப்போல நாள்தோறும் பத்துப்பெண்களைக் காமுற்றுச் செல்வாய். நீ ஒரு கண்குத்தித் கள்வன்.
ஆயன்: கொல்லும் கண்களும் கூரியபல்லும், தளிர்போன்ற தேகமும் கொண்டு என்னை வாட்டுபவளே! இந்த உலகத்தில் உன்னைவிட அழகி யாருமில்லை. நீ வருவாய். திருமால் அடியை என் தலையால் தொட்டுச் சூள் உரைக்கிறேன்.
ஆயமகள்: உன்னைப் பற்றித் தெரியாதவர் இதற்கு உடன்படுவர். நீ பொய்ச்சூள் உரைப்பவன். ஆனாலும், எங்கள் – வீட்டுப் படப்பைக்கு (கொல்லைப்புறம்) நீ வரும்போது பொதிகை மலையுடைய பாண்டியனின் சிறுகுடியில் வாழும் எம் ஆயர்குடி பாண்டியவேந்தன் இனிது வாழவேண்டி அந்நில தெய்வத்திற்குப் பலிபடைக்கிற ஆரவாரத்தின்போது வந்து, எருமன்றத்தில் கூத்தாடும் பெண்கள் காணாதவாறும் உன்னைக் கெளாதவாறும் ஆம்பல் குழல் கொண்டு கூவிக்கூவிக் காஞ்சி மரத்தின் கீழ் குறிசெய்தேன்.
இப்பாடலில் இடம்பெற்ற எளிய ஆய்த்தி – ஆயமகன் ஆகியோர் மக்கள் பாத்திரங்களாவர் (மேற்படி; 127, 128).
பதினோராடல்
மாதவி ஆடிய சடங்கு சார் ஆட்டங்கள்;
1. கொடுகொட்டி – கொடு – கருத்து கொடூரம், கடுமை (ஞிணிஞி) திரிபுரம் எரித்தபோது சிவன் ஆடிய ஆட்டம் (கலி- 1ல் கூறப்பட்டுள்ளது.)
2. பாண்டரங்கம் – சிவனின் மனைவி பாரதியால் ஆடப்பட்டது. – சிவன், பாரதி வடிவெடுத்து ஆடியது (அ.நா.) – பாண்டு – வெண்மை, அரங்கம் – இடம் (சுடுகாட்டைக் குறிக்கிறது).
3. அல்லியம் – கம்சன் – கிருஷ்ணனைக் கொல்ல வந்த யானையைக் கொல்கின்ற கதையை நிகழ்த்திக் காட்டப்பட்டது – 10 வகை ஆட்டங்களுள் ஒன்று.
4. மல்ஆடல் – மல்யுத்தம் – பாணனை கிருஷ்ணன் தோற்கடித்தது. – கிருஷ்ணன் மகனான அனிருத்தனுக்காக இப்போரைச் செய்தான்.
5. துடி – கடலின் நடுவே வேற்று உருவம் கொண்டு நின்ற சூரனை வெற்றி கொள்ள முருகனால் ஆடப்பட்ட ஆட்டம்
6. குடை – அவுணர் படையை வீழ்த்தி தோற்றதும் முருகன் தனது குடையைத் தாழ்த்தி அதையே ஒருமுக எழினியாகக் கொண்டு ஆடியது.
7. குடக்கூத்து – பாணனுடைய நகரத்தில் விஷ்ணுவால் ஆடப்பட்ட ஆட்டம் – மண், வெண்கலம், வெள்ளி, செம்பு, தாமிரம், இரும்பு ஆகியவற்றால் ஆன குடத்தைத் தலையில் வைத்து ஆடியது.
8. பேடி – காமன் பேடி உருக்கொண்டு ஆடிய ஆடல் – காமன் தன் மகனை பாணனுடைய நகரத்திலிருந்து மீட்க ஆடியது.
9. மரக்கால் ஆடல் – மாயவன் அவுனரைக் கொல்ல ஆடிய ஆட்டம் – அவுணர்கள் பாம்புகளாகவும் தேள்களாகவும் வேற்றுருக் கொண்டு வந்த போது மாயவன் ஆடிய ஆட்டம் – மாயவனைத் துர்க்கையாகவும் கொள்வர்.
10. பாவைக் கூத்து – பாவை – பொம்மையையும் பொம்மை போன்ற அழகுள்ள பெண்ணையும் குறிக்கும். அவுணர் போர்க் கோலத்தோடு மோகித்து விழும்படி திருமகள் கொல்லிப் பாவை வடிவு கொண்டு ஆடியது.
11. கடையம் – இந்திராணியால் பாணனுடைய வடக்கு வாயில் ஆடப்பட்டது. இந்திராணி கடைசியர் வடிவு கொண்டு ஆடியது.
நின்றாடல்கள் – அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல் (6)
வீழ்ந்தாடல் – குடக்கூத்து, பேடி, மரக்கால், பாவைக்கூத்து, கடையம் (5)
மாதவி ஆடிய பதினோராடல், வேறுபட்ட பாத்திரங்களின் செயல்களைத் தானே என்று நிகழ்த்தியவை என்பது குறிப்பிடத்தக்கது.
வரிக்கூத்துகள் – 8
வேனிற் காதையில் மாதவி ஆடிய வேனிற் கூத்துகள் பற்றிய குறிப்பு வருகிறது.
1. கண்கூடுவரி – முதன் முதல் தலைவன், தலைவி தாமே சந்திப்பதைக் காட்டுவது.
2. காண்வரி – பிறர் காணும்படி பலகாலும் வந்து நடிக்கும் கூத்து
3. உள்வரி – மற்றவர் அறியாதவாறு வேற்றுருக்கொண்டு நடித்தல்
4. புறவரி – தலைவி தலைவனைத் தழுவாது புறத்தே நின்று நடிப்பது
5. கிளர்வரிக் கோலம் – என்பதை நடுநின்றார் மாறுபட்ட இருவருக்கும் சந்துசொல்லக் கேட்டு நிற்பதாக நடித்தல்
6. தேர்ச்சி வரி – உறவு முறையார்க்கு தன் விதனங்களைத் (8 – குற்றங்கள்) தெரிவிக்கும் கூத்து
7. காட்சி வரி – தன் வருத்தத்தைப் பலரும் காணும்படி நடித்தல்
8. எடுத்துக்கோள் வரி – கையறவெய்தி வீழ்தலைக் கண்டு பிறர் எடுத்துக்கொள்ளும்படி நடித்தல்
இவ்வகைக் கூத்து பாலியல் சார்ந்த கூறுகளைக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது. ஒருவகையில் கவர்ச்சியான அம்சங்கள் கொண்டதாக இருக்கலாம்.
வேட்டுவரி
வேடுவர்களின் கூட்டுநிலை நாடகம். கோவலனும் கண்ணகியும் கௌந்தி அடிகளும் காட்டினைக் கடந்து வேடுவர்கள் கொற்றவையை வழிபடும் இடம் வந்து சேர்கின்றனர். வேடுவர்கள் சடங்கு செய்து கொண்டிருக்கின்றனர். இதில் அச்சமூகத்து குமரிப்பெண் ஒருத்திக்கு கொற்றவை போல் வேடம் தரித்து ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். அவளை அமர்த்திப் படையல் இடுகின்றனர். தெய்வம் ஏறிவர பல்வேறு வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. புகழ்ந்து பாடப்படுகிறது. தெய்வமாக நிற்கும் பெண்ணையும் புகழ்ந்து பாடுகின்றனர்.
இங்கு சடங்கு நிலை சார்ந்து பாடல்கள், கொற்றவை தெய்வம் சார்ந்த பாடல்கள் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கலைக் குழுக்கள் தனித்தனியாக இயங்கியுள்ளனர். அவர்கள் தொழில் முறைக் குழுக்களாக இருந்துள்ளனர் என்பது தெரிகிறது. தனித்தனியாக நிகழ்த்தியிருப்பதால் அவர்கள் பாடிய பாடல்கள் (புகழ்ந்துரை) என்பவை ஒன்றிணைந்து ஒரு கதை தழுவி இருந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. பெரும்பாலும் இவர்கள் நிகழ்த்திய இடங்கள் (நிகழ்த்து வெளிகள்) தெருக்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சில நிகழ்த்துதல்கள் சடங்கு சார்ந்தவையாகவும் சில கொண்டாட்டத்திற்கானவையாவும் இருந்திருக்கின்றன. சங்கப் பாட்டுகள் தலைமக்களை மற்றவர்களிடமிருந்து (மக்களிடமிருந்து) தனித்துக் காட்டும் தன்மையில் உள்ளன. அதுபோல் நிகழ்த்தப்பட்ட கதைகளும் தலைமக்களை மக்களிடமிருந்து தனித்துக் காட்டும் தன்மையதாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.
ஆக, கதை என்பதை தொடக்கம், நடு, முடிவு என்கிற அமைப்போடு மட்டும் நோக்க வேண்டியது இல்லை. ஒரு கதையின் ஒரு கூறு மட்டும் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். எல்லா நிகழ்த்தல்களும் ஏதோ ஒரு வகையான பனுவலை மையமாகக் கொண்டே இயங்குகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆட்டங்கள் – அது சார்ந்த இசை அனைத்திற்கும் மரபு சார்ந்த இலக்கணம் பின்பற்றப்படுவது நாம் அறிந்தது. பாடல் இணையும் போது அவ்வக்கால சூழலோடு ஏதோ ஒரு வகையில் அந்நிகழ்த்தல் இணைந்து போகிறது என்றால் அது ஒரு வகையான பனுவலை அடியொற்றி நிகழ்கிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. அப்பனுவல் கதையாக இருக்கவில்லை என்றாலும் கதைக் கூறைக் கொண்டு இயங்கும்போது அவை கதை தழுவிய கூத்தாக விளங்கின என்பதில் ஐயமில்லை.
பார்வை நூல்கள்:
இராமசுவாமி மு., தமிழ்ச் சமூகத்தில் கூத்து- நாடகம் ஒரு தொடர் விவாதத்தை நோக்கி, செம்பி படைப்பகம், மதுரை, 2008.
சிவத்தம்பி கா., பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம், குமரன் புத்தக இல்லம், சென்னை, 2004.
சூரியநாராயண சாஸ்திரி வி.கோ., நாடகவியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004.
ராஜ்கௌதமன், பதிற்றுப்பத்து – ஐங்குறுநூறு – சில அவதானிப்புகள், விடியல் பதிப்பகம், கோவை, 2011.
,, கலித்தொகை – பரிபாடல் ஒரு விளிம்பு நிலை நோக்கு, விடியல் பதிப்பகம், கோவை, 2011.