புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் புரிசையில் உள்ளது. அங்குள்ள தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியையும் அவருடனான பேட்டியையும் இப்பதிவில் காணலாம்.
அழகிய எளிமையான முறையில் அமைந்த ஒரு குடில். கண்ணப்ப தம்பிரான் அவர்களின் பெரிய நிழற்படம் ஒன்று சுவற்றில் மாட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி செய்வதற்காக சில நாடக உபகரணங்களும் இந்தப் பள்ளியில் உள்ளன. இந்த குடிலுக்கு உள்ளே நுழைவதற்கு முன் வாசலின் இடது புறத்தில் இந்தப் பள்ளி திறந்து வைக்கப்பட்டதை ஒட்டிய தகவல் கல்லில் பதிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் தலைவராக இருப்பவர் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்கள். இவரது தலைமுறையில் இவர் ஐந்தாமவர். பரம்பரை பரம்பரையாக தெருக்கூத்து கலையை வளர்க்கும் கலைஞர்களின் பாரம்பரியத்தில் வருபவர். இவர் தந்தையார் திரு. கண்ணப்ப தம்பிரான் அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த பின்னர் இவர் இம்மன்றத்திற்கு தலைமையேற்று இந்தக் கலையை தொடர்ந்து வளர்த்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த நான்கு வருடங்களாக ஒரு பயிற்சிப் பள்ளியை அமைத்து அதில் ஆர்வமுள்ளோருக்கு தெருக்கூத்து பயிற்சி வழங்கி வருகின்றார்.
வார இறுதி நாட்களில் தொடர்ந்து 15 வாரங்கள் என்ற வகையில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. சிறு குழந்தைகளுக்கான பயிற்சிகளும் அதில் இடம்பெறுகின்றன.
மஹாபாரதம் தவிர்த்து ராமாயணக் கதைகள், பாரதியின் பாஞ்சாலி சபதம், தெனாலி ராமன் கதைகள் போன்றவை தெருக்கூத்து கதைக்கருவாக பயன்படுத்தப்படுகின்றது. கொலம்பியாவில் நடைபெற்ற ஐந்தாவது உலக நாடக மானாட்டில் கலந்து கொண்டு தங்கள் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றனர். ப்ரான்ஸ், ஸ்வீடன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே தெருக்கூத்து நிகழ்ச்சிகளை அறங்கேற்றியிருக்கின்றனர். தமிழகத்தில் புரிசையில் மட்டுமன்றி சிங்கப்பூரிலும் தெருக்கூத்து பயிற்சியை நடத்திவருகின்றார்.
துரைசாமி தம்பிரான் காலத்தில் தோல்பாவை ஆட்டமாக ஆரம்பித்த இந்தக் கலை பின்னர் தெருக்கூத்துக் கலையாக உருவெடுத்து மாற்றம் கண்டிருக்கின்றது. தற்சமயம் இக்கலை மக்களின் கவனத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது என்றே இவர் குறிப்பிடுகின்றார்.
காலத்திற்கேற்றவாறு மாற்றங்களைப் புகுத்துவதோடு மக்கள் மத்தியில் இக்கலையை கொண்டு செல்ல உழைக்கும் இவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை.
ஒலிப்பதிவு :
பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: சுபா, திருமதி.புனிதவதி இளங்கோவன்
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
NOVEMBER 5, 2011