காடுகள் அழித்தொழிப்பு
கனிம வளங்கள் அழித்தொழிப்பு
காற்று அழித்தொழிப்பு
நீர் வளங்கள் அழித்தொழிப்பு
மலைகள், மனித இனங்கள் அழித்தொழிப்பு
அழித்தொழிப்புகள் தொடர்கின்றன. மனிதரைத் தவிர வேறு எந்த உயிரியும்
அழித்தொழிப்புகளில் ஈடுபடுவதில்லை. மனிதருள் எவர் இவ்வகைச் செயல்களில்
ஈடுபடுகின்றனர்? யாருக்காக?
அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, நகர வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி… என்பன
போன்றவை எல்லாம் யாருக்கானவை? யாரை நோக்கியவை? இயற்கை வளங்கள்
மனித இனத்தால் தம்வயப்படுத்திக் கொள்ளப்பட்ட காலம்தொடங்கி, மாபெரும்
அழிவுகளைச் சந்தித்த காலம் என்பது இம்மாதிரியான ‘வளர்ச்சி’ ஏற்பட்ட
காலத்தில்தான்.
அத்தியாவசிய தேவைகளுக்காக மனிதர்கள், இயற்கையை வளைத்துக் கொண்டது
போய், அதி உற்பத்திக்காக வியூகங்கள் தீட்டி தங்கள் ‘விஸ்வரூப’க் கைகளை விரித்துச்
சுருட்டிய – ஆக்கிரமித்த இயற்கை வளங்கள் எத்தனை எத்தனை?! வளர்ச்சி என்ற
பெயரில் மண்ணையும் மலையையும் காட்டையும் கடலையும் அவற்றை நம்பியே
வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிரிகளையும் இராட்சத எந்திரங்களால் அழித்துக்
கொண்டிருக்கின்றனர் இந்த வியூக ‘மனிதர்கள்’.
குறைந்த பட்சம், மிச்சம் இருக்கின்ற மண்ணையும் மலைகளையும் காடுகளையும்
நீரையுமாவது காத்துக்கொள்ள வேண்டாமா? உண்ண உணவில்லாமல், மூச்சு வாங்கக்
காற்று இல்லாமல், நாக்கை நனைக்க துளி நீர் இல்லாமல் ஆகிப்போனபின் இந்த மனித
இனத்தின் அறிவியல் வளர்ச்சியால் யாருக்கு, என்ன பயன் ஏற்படப்போகிறது? பூமிப்
பந்தைக் கவன் கல்லாய் ஆக்கி வீசி எரிந்துவிட்டு, எங்கே வாழப்போகிறோம்?
வெவ்வேறு கிரகங்களில் இருப்பிடங்களைத் தேடி அலைதல் யாருக்குச் சாத்தியம்?
மக்கட் பெருக்கமே இவற்றிற்கெல்லாம் முழுக்காரணம் என்று சொல்லப்படுவதில்
உண்மை உள்ளதா? உலகில் வெகு சிலரிடம் மிகு இருப்புகளும் மிகப் பலரிடம் பசியும்
பட்டினியும் மட்டுமே இருப்பதற்கு என்ன காரணம்? அதி உற்பத்தியின் பயன் யாரிடம்
சென்று சேர்கிறது? குவிமையம் கொண்டுள்ள ‘இருப்புகள்’ எந்த வகையில்
சேர்க்கப்பட்டவை?
சுயலாபத்திற்காக ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மனித இனத்திற்கும் உலக உயிரிகளுக்கும்
ஒவ்வாத காரியங்களையும் இயற்கைக்கு முரணாக, இவ்வகை அழித்தொழிப்புகளையும்
இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டாமா?
‘இயற்கை வளங்கள் வரம்பு மீறி சுரண்டப்படுதல் கூடாது. மனிதம் காக்கப்பட வேண்டும்’
என்ற பாட்டையில் பயணிக்கிறது ‘வியூகம்’. சகபயணிகளாக உங்களையும்
அழைக்கிறோம்.